அபுதாபியில் மற்றுமொரு அழகிய பூங்கா!!!

அமீரகத்திலே இதுவரை இல்லாத புதியதோர் முயற்சியாக அபுதாபி அரசால் ஜுபைல் தீவில் ஒரு அழகிய பூங்கா தற்பொழுது திறக்கப்பட்டுள்ளது.இப்பூங்காவானது அபுதாபியில் பொதுமக்களுக்காக ஜனவரி மாதம் முதல் திறக்கப்பட்டுள்ளது.
இது அபுதாபியின் சாதியத்தீவிற்கும் யாஸ் தீவிற்கும் இடையில் உள்ள ஜுபைல் தீவில் உள்ளது. இங்கே அபுதாபியைப் பூர்வீகமாக கொண்ட பறவைகள் மற்றும் பல கடல் வாழ் உயிரினங்களைக் காணலாம். சதுப்பு நில காடுகளின் ஊடே போடப்பட்டிருக்கும் நடைபாதையானது இப்பூங்காவின் சிறப்பம்சமாகும். துபாய் மற்றும் அபுதாபி நகரின் பல்வேறு இடங்களில் இருந்து இப்பூங்காவை எளிதில் அணுகலாம்.
பார்வையிடும் நேரம்
பூங்காவானது காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். இந்த இடைப்பட்ட நேரங்களில் நாம் எப்பொழுது வேண்டுமானாலும் சதுப்பு நிலக் காடுகளின் அழகை நடைபாதை மூலம் கண்டு களிக்கலாம். மேலும் இப்பூங்காவிற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாதலால் அனைத்து மக்களும் இப்பூங்காவிற்கு எளிதில் வருகை தரலாம்.
பயண நேரம்
அபுதாபி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இப்பூங்கா சென்றடைய 22 நிமிட பயணமாகும். மேலும் யாஸ் தீவிலிருந்து சென்றடைய 14 நிமிட பயணமும் ரீம் தீவிலிருந்து 21 நிமிட பயணமும் அல் கலீடியாவிலிருந்து 24 நிமிட பயணமும் ஆகும்.
துபாய் மெரினாவிலிருந்து 60 நிமிட பயணத்தில் இப்பூங்காவை அடையலாம்.
பூங்காவின் சிறப்பம்சம்
இப்பூங்காவில் போடப்பட்டிருக்கும் நடைபாதையே அமீரகத்தில் முதல் முறையாக சதுப்பு நில காடுகளுக்கு இடையே போடப்பட்டிருக்கும் நடைபாதையாகும். இப்பூங்காவில் நடக்க மொத்தம் மூன்று பாதைகள் உள்ளன. இதில் மிகவும் குறுகிய பாதையானது 1 கி.மீ தொலைவையும் நீண்ட பாதையானது 2 கி.மீ தொலைவையும் கொண்டுள்ளன.
மேலும் இரு பக்கமும் வலையுடன் கூடிய மிதக்கும் பாலமும் இங்குள்ளது. கூடவே அங்குள்ள சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த சந்தேகத்திற்கு பதிலளிக்கும் விதமாக அங்கே சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், மேற்கொண்டு பார்வையாளர்கள் நுழைவதற்கு முன்பாக, உள்ளிருக்கும் சில பார்வையாளர்கள் வெளியேறும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
சதுப்பு நில காடுகளுக்கு இடையே போடப்பட்டிருக்கும் நடைபாதையானது சிறந்த ஓய்விடமாகவும் மனதை அமைதிப்படுத்தும் இடமாகவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு கழிக்கும் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் அமைகின்றது.