அமீரக செய்திகள்

அமீரக தேசிய தின கொண்டாட்ட நிகழ்ச்சி: விழா மேடைக்கே பயணிகளுடன் வந்த “எதிஹாட் ரயில்”.. பயணிகளுக்கு புன்னகையுடன் கை அசைத்த அமீரக அதிபர்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் 51-வது தேசிய தினமானது நேற்று (வெள்ளிக்கிழமை) மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. அமீரகத்தின் ஏழு எமிரேட்டுகளிலுமே தேசிய தின கொண்டாட்டங்கள் வான வேடிக்கை, கலை நிகழ்ச்சி என கோலாகலமாக கொண்டாடப்பட்டிருந்தது.

அதில் முக்கிய நிகழ்வாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் இருக்கும் Adnec கண்காட்சி மையத்தில் (Abu Dhabi National Exhibition Centre) நடைபெற்ற தேசிய தின கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சி கருதப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஏழு எமிரேட்டுகளின் ஆட்சியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். இந்த சிறப்பு நிகழ்ச்சியானது நேரலையாக ஒளிபரப்பப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு விழாவில் அமீரகத்தின் பாரம்பரியத்தை எடுத்துக் கூறும் சிறப்பு நாடக நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது. நேரடி இசைக்குழுவுடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் அமீரகத்தின் தற்போதைய சாதனைகள் மற்றும் எதிர்கால சாதனைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. அதில் அமீரகத்தின் செவ்வாய் கிரகத்திற்கான விண்கலமான ஹோப் ப்ரோப் (Hope Probe) பற்றிய காட்சி இடம்பெற்றதுடன் தற்சமயம் அமீரகத்தில் முக்கிய திட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் எதிஹாட் ரயிலினைப் பற்றிய காட்சியும் இடம்பெற்றிருந்தது.

அதில் எதிஹாட் ரயிலின் ஒரு கோச் (coach) நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கத்தின் மேடையிலேயே வந்தது அனைவரையும் வியப்பிற்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. இந்த ரயில் பெட்டியினுள் பயணிகளும் இருந்து கொண்டு பார்வையாளர்களை நோக்கி கையசைத்திருந்தனர்.

அவர்களுக்கு விழாவில் கலந்து கொண்ட அமீரக அதிபரான மாண்புமிகு ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹ்யான் அவர்களும் கையசைத்து பதிலளித்தார்.

அமீரகத்தின் முக்கிய திட்டமான இந்த பயணிகள் ரயில் திட்டத்திற்கான பணிகள் தற்பொழுது மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அல் ருவைஸ், அல் மிர்ஃபா, துபாய், ஷார்ஜா, அல் தைத் மற்றும் அபுதாபி சிட்டி உட்பட ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு மூலையில் உள்ள அல் சிலாவிலிருந்து ஃபுஜைரா வரை 11 நகரங்கள் மற்றும் பிராந்தியங்களை இந்த பயணிகள் ரயில் இணைக்கும் என கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 400க்கும் மேற்பட்ட பயணிகள் அமரும் வசதியும், மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பயணிகள் அபுதாபியில் இருந்து துபாய்க்கு 50 நிமிடங்களிலும், அபுதாபியில் இருந்து ஃபுஜைராவுக்கு 100 நிமிடங்களிலும் பயணிக்கலாம் என்றும் இதனால் 2030 ஆம் ஆண்டில், பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 36.5 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அபுதாபியில் இங்கு மட்டுமல்லாமல் அபுதாபி கார்னிச் மற்றும் அல் வத்பாவில் உள்ள ஷேக் சையத் ஹெரிடேஜ் ஃபெஸ்டிவல் ஆகிய இடங்களிலும் தேசிய தினம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!