அமீரக செய்திகள்

அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட மதிய நேர இடைவேளை முடிவடைவதாக MOHRE அறிவிப்பு..!

அமீரகத்தில் மதிய நேர இடைவேளையில், கட்டுமானத் தளங்களில் உள்ள தொழிலாளர்களை பிற்பகல் நேரங்களில் வேலை செய்யத் தடை விதித்திருந்த மதிய ஓய்வு இடைவேளை நேற்றுடன் முடிவடைவதாக மத்திய மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) அறிவித்துள்ளது.

ஜூன் 15 முதல் 92 நாட்களுக்கு நீடித்த இந்த இடைவேளை சூரியனுக்குக் கீழே அல்லது திறந்த பகுதிகளில் தினமும் மதியம் 12.30 முதல் மாலை 3 மணி வரை கட்டுமானத் தளங்களில் உள்ள தொழிலாளர்கள் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை வழங்குவதையும், கோடை மாதங்களில் அதிக வெப்பநிலையில் ஏற்படும் அபாயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்ட இந்த இடைவேளை அமல்படுத்தப்பட்டது.

18வது ஆண்டாக தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த இடைவேளையானது, இலக்குகளை அடைவதற்காக தனியார் துறையின் கூட்டாளிகளின் ஒத்துழைப்புடன் ஒழுங்கமைக்கப்பட்ட தொடர்ச்சியான கட்டுப்பாடுகள், நடைமுறைகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளை உள்ளடக்கியது.

இதன்படி பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு குளிர்ந்த குடிநீரை நிறுவனங்கள் வழங்க வேண்டும், மேலும் நீரேற்ற உணவு மற்றும் திரவங்களை வழங்குவதன் மூலம் பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார நிலைமைகளை பராமரிக்க வேண்டும். தொழிலாளர்கள் ஓய்வு நேரத்தில் ஓய்வெடுக்க குடைகள், முதலுதவி பெட்டிகள், தகுந்த குளிரூட்டும் வசதிகள் மற்றும் நிழலான இடங்களை வழங்கவும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

வேலை வழங்குபவர்கள் தினசரி வேலை நேர அட்டவணையை, அரேபிய மொழியைத் தவிர, தொழிலாளர்கள் புரிந்துகொள்ளும் மற்ற மொழிகளிலும் தொழிலாளர்களுக்கு தெரியும் இடத்தில் வெளியிட வேண்டும். இதனை மீறும் பட்சத்தில் நிர்வாகத்திற்கு 5,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!