அமீரக செய்திகள்

அமீரகத்தில் ஜனவரி மாதம் திறக்கப்படவுள்ள IIT பல்கலைக்கழகம்..!! அதிகளவு இந்திய பல்கலைக்கழகங்களும் பள்ளிகளும் அமீரகத்தில் திறக்க திட்டம்… !! இந்திய கல்வி அமைச்சர் தகவல்….

ஐக்கிய அரபு அமீரகத்தில் 3.5 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் இருந்து பல முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் சர்வதேச பள்ளிகளும் அமீரகத்திற்கு வந்துள்ளன. ஏற்கனவே அபுதாபியில் எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் உள்ள பிரபல இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) டெல்லி பல்கலைக்கழகம் செயல்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழலில் தற்போது, இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு வரவிருக்கும் பல சிறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) அலுவலகத்தைத் திறக்க திட்டமிடப்பட்டு வருவதாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.

அமீரகத்திற்கு சமீபத்தில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட இந்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் அவர்கள், அமீரகத்தில் IITயைத் திறப்பதாகவும், இப்போது CBSE அலுவலகத்தை திறக்க உள்ளதாகவும் அபுதாபியில் தெரிவித்துள்ளார்.

மேலும், அமீரகத்தின் வெளியுறவு அமைச்சரும், கல்வி மற்றும் மனித வள கவுன்சிலின் (EHRC) தலைவருமான ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அமைச்சர் பிரதான் ஆகிய இருவரும் சந்தித்து கல்வித்துறை சார்ந்த கருத்துகளைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். கூடவே, IIT டெல்லி-அபுதாபி வளாகத்தின் முன்னேற்றத்தையும் அவர்கள் மதிப்பாய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

பள்ளிகளுக்கு இடையிலான பரிமாற்ற திட்டங்கள்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் அஹ்மத் பெல்ஹவுல் அல் ஃபலாசியை சந்தித்துப் பேசிய பிரதான், அமீரகத்தில் உள்ள இந்திய நிறுவனங்களை அங்கீகரித்தல் போன்றவை பற்றி உரையாடியதாகக் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், அவர்கள் இருவரும் கல்வித் துறையில் இந்தியா-UAE ஒத்துழைப்பை நெறிப்படுத்த உதவும், இரு நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும் மற்றும் இருவழி மாணவர் மற்றும் ஆசிரிய இயக்கத்தை ஊக்குவிக்கக் கூடிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

அமீரகத்தில் IIT வளாகம்:

சையத் பல்கலைக்கழகத்தில் (Zayed University) அமைந்துள்ள IIT டெல்லி-அபுதாபியின் வளாகத்தை சுற்றிப்பார்த்த அமைச்சர் பிரதான், “இந்தியாவின் கல்வியை சர்வதேசமயமாக்குவதற்கான எங்கள் முயற்சிகளில் IIT டெல்லி-அபுதாபி வளாகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

அடுத்தபடியாக, அமைச்சர் பிரதான் ஆரம்பக் கல்விக்கான மாநில அமைச்சரும் ஆரம்பக் கல்விக்கான கூட்டாட்சி அமைப்பின் (FAEE) தலைவரும் மற்றும் அபுதாபி கல்வி மற்றும் அறிவுத் துறையின் (ADEK) தலைவரருமான சாரா முஸல்லம் அவர்களுடன் சேர்ந்து திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்துள்ளார்.

 

இந்தியப் பள்ளிகளுக்கான அமீரகத்தின் ஆதரவு, எமிரேட்களில் உள்ள இந்தியக் குழந்தைகளை இந்தியப் பாடத்திட்டங்களுடன் இணைக்கப்படுவதை உறுதி செய்வதில் முக்கியப் பங்காற்றியுள்ளது என்று பிரதான் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 42 அபுதாபி என்ற புதுமையான கோடிங் ஸ்கூலை அவர் பார்வையிட்ட போது, அங்கு கற்றல் முறை பற்றி அவருக்கு விவரிக்கப்பட்டுள்ளது.

 

 

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!