அமீரக செய்திகள்

இந்தியா-அமீரகம்: பயணிகளுக்கு ரேபிட் PCR சோதனையில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை..!! உயர் அதிகாரி தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்லும் பயணிகளில், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு, கட்டாய ரேபிட் PCR பரிசோதனையை அகற்றுவது குறித்து ஆலோசிக்க, இந்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிப்பவர்களுக்கு கட்டாய PCR பரிசோதனையை நிறுத்துவதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

தற்போதிருக்கும் விதியின்படி, பயணிகள் எந்தவொரு இந்திய விமான நிலையத்திலிருந்தும் அமீரகத்திற்கு பயணிக்கவிருந்தால் அவர்கள் புறப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன் ரேபிட் PCR பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, நைஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் இந்த சோதனையை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் இந்த சோதனை மேற்கொள்வதற்கு கிட்டத்தட்ட 4,000 ரூபாய் பயணிகள் செலவழிக்க வேண்டியிருக்கின்றது.

இது குறித்து அந்த அதிகாரி கூறுகையில், “முழு தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு 4,000 ரூபாய் செலவாகும் கட்டாய ரேபிட் PCR பரிசோதனைக்கு விலக்கு அளிக்க ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்துடன் இந்த விஷயத்தை மேற்கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்று கூறியிருக்கிறார்.

இந்த கட்டாய ரேபிட் சோதனை பயண நேரத்தை நீட்டித்து, விமான நிலையத்தில் உள்ள மாதிரி சேகரிப்பு மையத்தில் பயணிகள் கூட்டமாக நின்று சோதனை மேற்கொள்ளவும் பின்னர் சோதனை முடிவுக்காக காத்திருக்கவும் வழிவகுக்கின்றது என பயணிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கொரோனாவிற்குப் பிறகு வேலையின்றி தவித்து பின்னர் மீண்டும் அமீரகம் வந்து வேலையைத் தொடங்கவிருக்கும் தொழிலாளர்களுக்கு இது ஒரு விலையுயர்ந்த சோதனை என்றும் சிலர் கூறுகின்றனர்.

தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான இந்த சோதனையை ஐக்கிய அரபு அமீரக அரசு நிறுத்தினால் மகிழ்ச்சியடைவதாக பயணிகள் பலரும் கூறி வருகின்றனர்.

அத்துடன் பயணி ஒருவர் கூறுகையில், இந்திய விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ரேபிட் சோதனைக்குப் பிறகும், ஐக்கிய அரபு அமீரக அரசு பயண விதிமுறைகளின்படி பயணிகளை மீண்டும் சோதனை செய்கிறது. சில சந்தர்ப்பங்களில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியுள்ளது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இதில் சில தளர்வுகள் இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!