அமீரக செய்திகள்

UAE: “குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 500 திர்ஹம் பரிசு” .. விநோத போட்டியை அறிவித்த சுகாதார அமைச்சகம்…!!

பலரது வாழ்க்கையில் உடல் பருமன் பல வித சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இருந்தபோதிலும், அவர்கள் தங்களின் அளவுக்கு அதிகமான உடல் எடையை குறைப்பதற்கு பெரிதாக முயற்சி செய்வதில்லை.

ஐக்கிய அரபு அமீரகம் உலகளாவிய உடல் பருமன் குறியீட்டில் 5வது இடத்தில் உள்ளது, வயது வந்தோரில் 40.1 சதவீதம் பேர், 11 முதல் 16 வயதுடையவர்களில் 40 சதவீதம், மற்றும் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 20 சதவீதம் பேர் பருமனாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ராஸ் அல் கைமாவில் புதுவிதமான போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய போட்டியில் உடல் எடையை குறைப்பதற்காக போட்டியாளர் ஆயிரக்கணக்கான திர்ஹாம்களை வெல்லக்கூடிய வாய்ப்புள்ளது.

சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகத்துடன் இணைந்து RAK மருத்துவமனையால் இந்தப் போட்டி தொடங்கப்பட்டுள்ளது.

‘RAK Biggest Weight Loser Challenge’ (RBWL) எனும் போட்டியில் அதிகமான அளவு உடல் எடையை குறைத்தவர்களுக்கு அவர்கள் குறைத்த ஒவ்வொரு கிலோவிற்கும் 500 திர்ஹம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 வாரம் நிகழ்த்தப்படும் இந்த போட்டி டிசம்பர் 17 அன்று தொடங்கி, மார்ச் 4, 2022 அன்று ‘உலக உடல் பருமன் தினத்தில்’ முடிவடையவிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் அமீரகம் முழுவதும் 3,000 க்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்று அமைப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

போட்டியானது நேரிடையாக, விர்ச்சுவல் மற்றும் கார்ப்பரேட் முறை என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

நேரடி முறை:

டிசம்பர் 17-19 தேதிகளில் RAK மருத்துவமனை வளாகத்தில் பங்கேற்பாளர்களின் எடை கணக்கிடப்பட்டு போட்டி தொடங்கும். பங்கேற்பாளர்களின் எடை மற்றும் பிற முக்கிய அளவுருக்களை அளவிடுவதற்கும், போட்டியில் அவர்கள் பதிவு செய்வதற்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் அடங்கிய குழு இருப்பார்கள்.

விர்ச்சுவல் முறை

நேரடியாக கலந்து கொள்ள முடியாத ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் இந்தப் பிரிவின் மூலம் பங்கேற்கலாம். அவர்கள் தங்களுக்கு அருகில் உள்ள கிளினிக்கில் தங்கள் எடையை அளவிட்டு அங்கீகரிக்கப்பட்ட பதிவு படிவத்தை போட்டி இணையதளத்தில் பதிவேற்றலாம்.

கார்ப்பரேட் முறை

குழுவாக ஒன்றிணைந்து உடல் பருமனை குறைக்க விரும்புபவர்கள் ‘கார்ப்பரேட் டீம்ஸ் சேலஞ்ச்’ பிரிவில் பங்கேற்கலாம்.

பரிசுகள்

போட்டியில் வெல்பவர்களுக்கு பரிசுகள் ரொக்கமாகவோ அல்லது தங்கும் இடங்கள், மற்றும் விடுமுறை பேக்கேஜ்கள் மற்றும் டைனிங் வவுச்சர்கள் போன்றவையாகவோ இருக்கும்.

மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெறுபவர்கள் விருது வழங்கும் விழாவின் போது பாராட்டப்படுவார்கள். இந்த போட்டியில் மொத்தம் ஐந்து வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதில் நேரிடையாக கலந்து கொண்டவர்களில் இருந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், விர்ச்சுவல் முறையில் கலந்து கொண்டவர்களில் இருந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மற்றும் கார்பரேட் முறையில் இருந்து ஒரு குழு என மொத்தம் 5 பரிசுகள் வழங்கப்படும்.

இது குறித்து RAK மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராசா சித்திக் கூறுகையில், “அனைத்து ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களையும் இந்த போட்டியில் கலந்து கொள்ள நாங்கள் அழைக்கிறோம், இது அனைத்து வயதினரையும் உடற்தகுதி மற்றும் ஆரோக்கியத்தைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தொற்றுநோயானது உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் நமது கவனத்தை நகர்த்தியிருந்தாலும், உடல் பருமனால் ஏற்படும் சிக்கல்களை நம்மில் பலர் இன்னும் அறிந்திருக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு Weight loss challenge என்ற லிங்கை பார்வையிடவும்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!