அமீரக செய்திகள்

UAE: சரியான நேரத்தில் வாகனத்தைப் புதுப்பித்தால் பரிசுகளை பெறலாம்!! வாகன உரிமையாளர்களை ஊக்குவிக்கும் ஷார்ஜா காவல்துறை…!!

வாகனப் பதிவை குறித்த நேரத்தில் புதுப்பிப்பதற்கு வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், ஷார்ஜா காவல்துறை புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரத்தின் படி, சரியான நேரத்தில் வாகனப் பதிவை புதுப்பிக்கும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், மோட்டார் இன்சூரன்ஸ், வாகன சோதனை மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான சிறப்பு சலுகைகளை உள்ளடக்கிய ஒரு விரிவான பேக்கேஜ் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘Renew Your Vehicle’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரச்சாரத்தில் அரபு, ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் குறித்த நேரத்தில் வாகனத்தைப் புதுப்பிப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு போன்றவை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ஷார்ஜாவில் உள்ள வாகன உரிமத் துறையின் இயக்குநர் கர்னல் காலித் முகமது அவர்கள் பேசுகையில், இதேபோன்ற பிரச்சாரங்களை முந்தைய ஆண்டுகளில் நடத்தியதாகவும், இந்த முறை பொதுமக்களுக்கு கூடுதல் நன்மைகள் மற்றும் பரிசுகளை வழங்க பல்வேறு சமூக பங்குதாரர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கிடைத்துள்ள தகவல்களின் படி, இந்தாண்டின் முதல் பாதியில், ஷார்ஜா முழுவதும் 263,804 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஷார்ஜா முழுவதும் உள்ள 18 வாகன சோதனை மையங்களில், வாகன உரிமையாளர்கள் தேவையான புதுப்பித்தல் சேவைகளுக்கு வசதியான அணுகலைப் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து அபராதம்:

இந்த பிரச்சாரம், வாகனப் புதுப்பித்தல் செயல்பாட்டின் போது ஏற்படும் திரட்டப்பட்ட போக்குவரத்து அபராதம் தொடர்பான பிரச்சனையை தீர்க்கும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ஷார்ஜா அரசு பல தள்ளுபடி திட்டங்களை அறிமுகப்படுத்தி, வாகன உரிமையாளர்கள் தங்களது போக்குவரத்து அபராதம் செலுத்துவதை ஊக்குவித்துள்ளது. அதன்படி, மார்ச் 31, 2023க்கு முன் விதிக்கப்பட்ட போக்குவரத்து அபராதங்களில் 50 சதவீத தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதுபோல, ஏப்ரல் 1, 2023 முதல், விதிமீறலைச் செய்த 60 நாட்களுக்குள் அபராதத் தொகையைச் செலுத்தினால், 35 சதவீதம் தள்ளுபடியைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விதிமீறல் செய்து 60 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்குள் செலுத்தப்படும் அபராதத்திற்கு 25 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுப்பிக்கப்படாத வாகனங்களினால் ஏற்படும் அபாயங்கள்:

ஷார்ஜா காவல்துறை நடத்தும் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, உரிமையாளர்கள் தங்கள் வாகனங்களை புதுப்பிக்காமல் கைவிடுவதைத் தடுப்பதாகும். புதுப்பிக்கப்படாத வாகனங்களினால் டயர் சேதம் மற்றும் தவறான விளக்குகள் போன்ற, விபத்துக்கள் மற்றும் காயங்கள் போன்ற துயரான விளைவுகள் அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது. எனவே, வாகனத்தைப் புதுப்பிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்தப் பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!