அமீரக செய்திகள்

துபாய்: கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்.. கோமா நிலையில் பிரசவம்.. தாயும் குழந்தையும் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கும் நிலையில், ஆறு மாத கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்து கோமா நிலையில் பெற்றெடுத்த தன் குழந்தையுடன் அந்த தாய் மீண்டும் சேர்ந்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று துபாயில் நிகழ்ந்துள்ளது.

துபாயில் வசிக்கக்கூடிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இளம் தம்பதிகளான மஹாம் இர்ஃபான் மற்றும் உமர் முக்தார் ஆகியோரின் வாழ்க்கையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. புதிதாக திருமணமாகிய இந்த இளம் தம்பதிகள் தங்களின் முதல் குழந்தை பிறப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கர்ப்பிணி தாய் மஹாம் இர்ஃபான் தனது கர்ப்ப காலத்தின் 23 வது வாரத்தில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் லேசான அறிகுறிகளுடன் காணப்பட்ட மஹாமின் உடல்நிலை, படிப்படியாக மோசமடைந்தது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது. இதனால் அவரை துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த நிலையிலும் அவரின் உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்ததால் மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்து கவனித்து வந்துள்ளனர். ஆனாலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகியதால், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு, அவரின் இதய துடிப்பை உயிர்ப்புடன் வைப்பதற்காக கர்ப்ப காலத்தின் 25 வது வாரத்தில் அந்த கர்ப்பிணி தாயை வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தீவிரமான சிக்கல்களால் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றிருந்தாலும், அந்த தாயின் வயிற்றில் இருந்த குழைந்தை ஆரோக்கியமாகவே இருந்துள்ளது. ஆரம்பத்தில் கர்ப்பிணி தாயின் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக 28 வது வாரத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியில் எடுக்க மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

எனினும் அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி கொண்டே வந்ததால், நீண்ட நேரம் காத்திருப்பது அவரின் வயிற்றில் இருந்த அந்த குழந்தையின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என எண்ணிய மருத்துவர்கள், தாய் மற்றும் குழந்தை இருவரையும் காப்பாற்ற 27 வது வாரத்தில் அவசர அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை காப்பாற்றியுள்ளனர். இருப்பினும் 13 வாரங்களுக்கு முன்னதாகவே குழந்தை வெளியில் எடுக்கப்பட்டதால் அக்குழந்தையையும் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

தனக்கு பிறக்கப் போகும் முதல் குழந்தை பற்றி உற்சாகமாகவும், பல கனவுகளையும் கொண்டிருந்த மஹாமின் கணவர் உமர் முக்தாருக்கு, ஒரே நேரத்தில் தன் மனைவி மற்றும் குழந்தை இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தது அவருக்கு மட்டுமில்லாமல், அவர்களது குடும்பத்தினர்கள் மற்றும் மருத்துவர்கள் உட்பட அனைவருக்கும் சோதனையான நேரமாக அமைந்துள்ளது. இத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் கடவுளின் அருளாலும், மருத்துவத்தின் உதவியாலும் தாய் மற்றும் சேய் இருவரும் உயிர் பிழைத்து மீண்டும் அந்த குடும்பம் தற்போது ஒன்றிணைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து மஹாமின் கணவர் உமர் கூறுகையில், “என் மனைவியின் உடல்நிலை மற்றும் எங்கள் குழந்தை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து நான் மிகவும் கவலைப்பட்டேன். நாங்கள் புதிதாக திருமணமானவர்கள், எங்கள் முதல் குழந்தையை பற்றி நாங்கள் மிகவும் உற்சாகமாக இருந்தோம். என் மனைவி மற்றும் குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமானது என்ற செய்தி வந்தபோது, ​​இது எங்களுக்குதான் நடக்கிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவரின் மனைவி மற்றும் குழந்தை உயிர் பிழைத்து மீண்டும் அவருடன் ஒன்றிணைந்தது பற்றி கூறுகையில், “என்ன நடந்தது என்பது ஒரு அதிசயம், நாங்கள் மூன்று பேரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறோம், இந்த கதையைச் சொல்ல இங்கே நாங்கள் இருக்கிறோம் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

இத்தனை தடைகளையும் தாண்டி உயிர் பிழைத்து வந்த அந்த கர்ப்பிணி தாய் மஹாம் கூறுகையில், “நான் மீண்டும் பேசவும், மீண்டும் நடக்கவும், எந்த அடிப்படைச் செயலையும் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் வெறும் சுகாதார பணியாளர்கள் மட்டும் அல்ல, அவர்கள் எனக்கு குடும்பமாய் ஆனார்கள், அவர்கள் என்னுடன் அழுதார்கள், என்னுடன் சிரித்தார்கள், என்னை மீண்டும் உயிர்ப்பிப்பதில் ஒவ்வொரு சிறிய சாதனையையும் கொண்டாடினார்கள். என் குடும்பத்திற்காகவும் எனக்காகவும் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

கோமா நிலையில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கர்ப்பிணி தாய் மஹாம், பிரசவம் முடிந்து ஒரு மாதத்திற்கு பிறகு கோமாவிலிருந்து வெளியே வந்துள்ளார் என்பதும், ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தன் குழந்தையுடன் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!