அமீரக செய்திகள்

UAE: வெறும் 50 திர்ஹமில் 6 மணி நேரத்திற்குள் PCR சோதனை முடிவு..!! புதிய டிரைவ் த்ரூ கொரோனா சோதனை மையத்தை திறந்துள்ள ஷார்ஜா..!!

ஷார்ஜா நகர முனிசிபாலிட்டியானது (SCM) ஷார்ஜாவின் மிகப்பெரிய டிரைவ்-த்ரூ கொரோனா சோதனை மையத்தைத் திறப்பதாக அறிவித்துள்ளது. ஷார்ஜாவின் 5 வது தொழில்துறை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என கூறப்பட்டுள்ளது.

இது பற்றி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “புதிய மையமானது பொதுமக்களுக்கு சோதனைச் சேவையை எளிதாகவும் விரைவாகவும் வழங்குவதை உறுதி செய்யும். மேலும் வெறும் 50 திர்ஹமில் சோதனை செய்த ஆறு மணி நேரத்திற்குள் முடிவைப் பெற முடியும், ”என்று முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த மையத்தில் ஒரே நேரத்தில் 16 வாகனங்கள் நிறுத்த முடியும் என்றும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 7.30 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இது ஷார்ஜாவின் இந்த கூடுதல் கொரோனா சோதனை மையம் பிற மையங்களின் வேலை அழுத்தத்தை குறைக்கிறது. புதிய மையத்தில் வாகன நுழைவு மற்றும் வெளியேறலை ஒழுங்கமைக்கவும், மக்களின் சோதனையை குறுகிய காலத்தில் முடிக்கவும் தேவையான எண்ணிக்கையிலான பணியாளர்களை நகராட்சி வழங்கும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!