அமீரக செய்திகள்

துபாய்: எக்ஸ்போ 2020 ல் கோலாகலமாக கொண்டாடப்பட்ட இந்திய குடியரசு தினம்..!! தொழிலாளர்கள் முன்னிலையில் கொடியேற்றிய இந்திய தூதர்..!!

இந்தியாவின் 73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று காலை நடைபெற்ற கொடியேற்றும் விழாவை தொடர்ந்து, எக்ஸ்போ 2020 இன் அல் ஃபோர்சன் மாவட்டத்தில் உள்ள இந்தியா பெவிலியனில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் குடியரசு தின கொண்டாட்டங்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஜனவரி 26 ம் தேதியான இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில், துபாய்க்கான இந்திய துணை தூதரகத்தின் தூதர் டாக்டர் அமன் பூரி, பல தொழிலாளர்கள் மற்றும் இந்திய நாட்டை சேர்ந்த குடியிருப்பாளர்களுடன் எக்ஸ்போ 2020 ல் அமைந்துள்ள இந்திய பெவிலியனுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில் இந்தியக் கொடியை ஏற்றி குடியரசு தின விழாவை தொடங்கிவைத்தார்.

அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த மக்கள் முன்னிலையில் உரையாற்றும் போது “இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து இந்தியர்கள் மற்றும் இந்திய நண்பர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இரு நாடுகளுக்கும் இது ஒரு சிறப்பு தருணம், நாங்கள் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் 50 வது தேசிய தினத்தை கொண்டாடுகிறது” என்று கூறினார்.

பின்னர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பள்ளி மாணவர்கள் மற்றும் நடனக் குழுவினர், இந்திய கலாச்சார உடைகளை அணிந்துகொண்டு கண்கவர் நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் அமீரகத்தில் பணிபுரியும் ப்ளூ காலர் தொழிலாளர்களும், கட்டுமான தொழிலாளர்களும் எக்ஸ்போ 2020 இல் நடைபெற்ற இந்த கொண்டாட்டங்களில் துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய குடியிருப்பாளர்களுடன் இணைந்து கண்டு மகிழ்ந்தனர்.

இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியரசு தினத்தை கொண்டாடுவது இதுவே முதல் முறை என்றும், எக்ஸ்போ 2020 ல் நடைபெறும் இந்த குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்குபெறுவதை பெரும் பாக்கியமாக உணர்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

பத்து வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் ஒரு தொழிலாளி கூறுகையில், “பல வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு கொடியேற்று விழாவை நேரடியாகப் பார்க்க முடிந்தது. இது ஒரு நம்பமுடியாத காட்சியாக இருந்தது. எனது பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தது, இதை காணும் போது இந்தியாவில் இருப்பது போல் உணர்ந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

எக்ஸ்போ 2020 துபாயில் நடைபெற்றுவரும் இந்த குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இன்று இரவு 9.30 மணிக்கு எக்ஸ்போ பார்வையாளர்கள் முன்னிலையில் வைரல் பாடலான ஜிலேபி பேபி பாடலை பாடிய பாடகி ஸ்வேதா சுப்ரம் மற்றும் துபாயை தளமாகக் கொண்ட ரூஹ் இசைக்குழுவின் முன்னணி பாடகரும் நிறுவனருமான அனுபம் நாயர் ஆகியோரின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!