அமீரக செய்திகள்

துபாய்க்கு டூரிஸ்ட் விசாவில் வந்த தமிழர் மறுநாள் முதல் காணவில்லை..!! கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்த அவரது உறவினர்கள்..!!

தமிழகத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு டூரிஸ்ட் விசாவில் வந்து சேர்ந்த தமிழர் துபாயை வந்தடைந்த மறுநாளில் இருந்து காணவில்லை என்று அமீரகத்தில் உள்ள அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த நவம்பர் 8 ம் தேதி அமீரகத்திற்கு வந்தடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த அமிர்தலிங்கம் சமயமுத்து (வயது 46) என்ற நபர் நவம்பர் 9 முதல் காணவில்லை என அவரது உறவினரான துரை மணிராஜா என்பவர் அமீரக செய்தி நாளிதழான கல்ஃப் நியூசிற்கு தெரிவித்துள்ளார்.

அமிர்தலிங்கம் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி தமிழ்நாட்டிலிருந்து மூன்று பேருடன் சேர்ந்து அமீரகத்திற்கு வந்துள்ளார். அவர்கள் ஹோர் அல் அன்ஸில் ஒரு தங்குமிடத்தில் தங்கி இருக்கின்றனர். மறுநாள் காலையில் அவர் பணியிடத்திற்குச் சென்றதாக அவரது அறை தோழர்கள் தெரிவித்தனர். அவர் திரும்பி வந்த பிறகு, அவரது அறை தோழர்கள் இரவில் வேலைக்குச் சென்றார்கள் என்று ராஸ் அல் கைமாவில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வரும் துரை என்கிற மீனவர் தெரிவித்துள்ளார்.

அவர் மட்டும் அறையில் தனியாக இருப்பதால் அமிரதலிங்கம் வருத்தப்படுவதாகவும், மேலும் வெளியே செல்ல விரும்புவதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. ஆனால் அந்த அறையில் உள்ள மற்றவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளதாகவும் தெரிகின்றது. அதன் பின்னர், அவரைப் பற்றி எந்த செய்தியும் அவர்கள் கூறவில்லை என்றும் துரை தெரிவித்துள்ளார்.

மேலும், “அவரிடம் அமீரக சிம் கார்டு இல்லாததால் அமிர்தலிங்கம் அவரது வீட்டினரிடமும் பேசவில்லை. என்னிடமும் ஏதும் பேசவில்லை. பின்னர், அவரது குடும்பத்தினரிடமிருந்து நான் அழைப்புகளைப் பெறத் தொடங்கியதிலிருந்து, அவரைப் பற்றி விசாரிக்க துபாயில் இருக்கும் எனது உறவினரான ஜபெல் அலியில் ஓட்டுநராக பணிபுரியும் அவரது உறவினர் கண்ணன் நாகூர்கானி என்பவரை அணுகினேன்” என்று துரை தெரிவித்துள்ளார். மேலும், அவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் கிடைக்காதலால் கடந்த நவம்பர் 16 ம் தேதி கண்ணன் நாகூர்கானி அல் முரகாபத் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தாகவும் கூறியுள்ளார்.

அமிர்தலிங்கம் சென்ற நிறுவனத்தின் நிர்வாகியை தொடர்பு கொண்டபோது, ​​”அவர் விசிட் விசாவில் இருப்பதாகக் கூறினார். மேலும், அவர் தனது பாஸ்போர்ட்டையோ அல்லது பிற பொருட்களையோ எடுத்துக் கொள்ளவில்லை என்றார்” என்று கூறியுள்ளார்.

அமிர்தலிங்கத்தை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் முறையிட்ட கண்ணன், அவர் காணாமல் போனபோது வெளிர் நீல நிற சட்டை மற்றும் கருப்பு பேன்ட் அணிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்திய துணைத் தூதரகத்திற்கு முறையீடு

காணாமல் போனவர் குறித்து இரண்டு வாரங்களுக்கும் மேலாக எந்த தகவலும் இல்லாத நிலையில், அவரது குடும்பத்தினர் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திடம் முறையிட்டுள்ளனர். தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் வியாழக்கிழமை ஒரு ட்வீட் மூலம் புகாரைப் பெற்ற பின்னர், இந்த விவகாரத்தில் உதவி செய்வதாகக் கூறியுள்ளார். மேலும், அவரது உறவினர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

துபாயில், விசா தேவைகளை பூர்த்தி செய்யாததற்காக பல்வேறு தேசங்களைச் சேர்ந்த பல நபர்கள் வேலை தேடி விமான நிலையத்தில் நுழைவதற்கு மறுக்கப்பட்டதை அடுத்து, சுற்றுலா / வருகை விசாக்களில் வேலை தேடுவதற்காக துபாய் வருவதை எதிர்த்து இந்தியர்கள் இவ்வாறு பயணம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும், சுற்றுலா விசாக்களில் உண்மையான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வருவதை உறுதிசெய்ய தூதரகம் அறிவுறுத்தல்களை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “நீங்கள் ஒரு குறிப்பிட்ட விசா பிரிவில் இருந்தால், நீங்கள் அந்த விசாவிற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். எந்தவொரு நாடும் பயணிகளை முறையான ஆவணங்கள் இல்லாமல் ஏற்றுக் கொள்ளாது. இமிகிரேஷன் அதிகாரிகளின் விதிகளை நாங்கள் மதிக்க வேண்டும், யாரும் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் அல்லது டூரிஸ்ட் விசாவில் வேலை தேடி வரக்கூடாது” என்று தெரிவித்திருந்தார்.

அத்துடன், இ-மைக்ரேட் ஆன்லைன் ஆட்சேர்ப்பு போர்ட்டல் (e-Migrate online recruitment portal) மூலமாக மட்டுமே இந்திய தொழிலாளர்களை (blue-collar workers) ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்றும் முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அந்த அதிகாரி மீண்டும் வலியுறுத்தினார்.

கொரோனா தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு துபாய்க்கு வந்த பின்னர் ஒரு இந்தியர் காணாமல் போனது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர், டூரிஸ்ட் விசாவில் வேலை தேடி துபாய் வந்த கேரளாவை சேர்ந்த செனோத் துருத்தும்மல் ஆஷிக், (வயது 31) என்பவர் வழிதவறி சென்று காணாமல் போன பின்னர் அவர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடக்கத்து.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!