அமீரக சட்டங்கள்

அமீரகத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எப்படி..?? வழிமுறைகள் என்ன..?? தகவல்கள் உள்ளே…!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் பெறுவது அமீரகத்தில் வசிக்கும் பலரது எண்ணமாக இருக்கும். ஆனால் அதற்கான முறையான வழிமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை. அவர்களுக்காகவே இந்த பதிவு.

அமீரகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களும் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஓட்டுநர் உரிமம் பெற முதலில் ஓட்டுநர் தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும்.

ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க உங்களுக்கு எவ்வளவு வயது இருக்க வேண்டும்?

இது நீங்கள் ஓட்டத் திட்டமிடும் வாகனத்தின் வகையைப் பொறுத்தது. உங்கள் சோதனையை மேற்கொள்வதற்கு முன் உங்களுக்கு குறைந்தது 18 வயது இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் 17 வயது ஆறு மாதங்கள் ஆகும்போதே வாகன உரிமத்திற்கான வகுப்புகளில் கற்க ஆரம்பிக்கலாம்.

அதே நேரத்தில் கனரக வாகனங்கள் அல்லது டிராக்டர்களுக்கான உரிமத்தைப் பெற விரும்பினால், உங்களுக்கு 20 வயது இருக்க வேண்டும் மற்றும் பேருந்துகளுக்கான உரிமத்திற்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.

வேறொரு நாட்டில் வாகனம் ஓட்டுவதற்கு நான் தகுதி பெற்றிருந்தால், நான் ஓட்டுநர் பயிற்சி எடுக்க வேண்டுமா?

சில நாடுகளால் வழங்கப்பட்ட உரிமம் உங்களிடம் இருந்தால், நீங்கள் ஓட்டுநர் பயிற்சி பெற வேண்டிய அவசியமில்லை அல்லது மற்றொரு சோதனை கூட எடுக்க வேண்டிய அவசியமில்லை. இது உங்கள் உரிமம் எங்கு வழங்கப்பட்டது என்பதைப் பொறுத்தது. அங்கீகரிக்கப்பட்ட 32 நாடுகளில் இருந்து ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள் அமீரக ஓட்டுநர் உரிமத்திற்கு தானாகவே தகுதி பெறுவார்கள். இருப்பினும், உங்கள் உரிமம் முன் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இல்லாத ஒரு நாட்டினால் வழங்கப்பட்டிருந்தால், நீங்கள் அமீரகத்தில் உரிமம் பெற புதிதாக தொடங்க வேண்டும். இதில் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த ஓட்டுனர்களும் அடங்குவர்.

எனது ஓட்டுநர் உரிமத்திற்கு நான் என்ன விண்ணப்பிக்க வேண்டும். எனக்கு கண் பரிசோதனை தேவையா?

முதலாவதாக, உங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான வகுப்புகளை வழங்கி இறுதியில் வாகனம் உரிமம் பெற மேற்கொள்ளப்படும் சோதனைகளை பெறுவதற்கு ஒரு ஓட்டுநர் பள்ளியில் பதிவுசெய்ய வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற உங்களுக்கு 18 வயது இருக்க வேண்டும்.

அபுதாபியில் ஓட்டுநர் பயிற்சி பெற தேவையான ஆவணங்கள்

  • பாஸ்போர்ட் மற்றும் குடியிருப்பு விசா பக்கத்தின் நகல்
  • அசல் எமிரேட்ஸ் ஐடி மற்றும் ஒரு நகல்
  • இரண்டு புகைப்படங்கள்
  • கண் பரிசோதனை அறிக்கை
  • உங்கள் ஸ்பான்சரிடமிருந்து ஆட்சேபனை இல்லாத கடிதம் (NOC)

துபாயில் ஓட்டுநர் பயிற்சி பெற தேவையான ஆவணங்கள்:

  • அசல் எமிரேட்ஸ் ஐடி அல்லது நகல்
  • துபாயில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் விசா மற்றும் விசா பக்கத்தின் நகல்
  • அதே வாகன வகைக்குள் உள்ள மற்றொரு நாட்டிலிருந்து அசல் ஓட்டுநர் உரிமம் (பொருந்தினால்)
  • உரிமம் ஆங்கிலம் அல்லது அரபு மொழியில் இல்லை என்றால் அது துபாயில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், உங்கள் நாட்டின் தூதரகத்திலிருந்து ஒரு கடிதம் தேவை
  • கண் பரிசோதனை அறிக்கை

நீங்கள் ஓட்டக் கற்றுக் கொள்ளத் தயாரானதும், பதிவுசெய்யப்பட்ட ஓட்டுநர் மையத்தில் ட்ராஃபிக் ஃபைலை துவங்க வேண்டும். நீங்கள் ஓட்டுநர் பயிற்சி பாடங்களை ஆரம்பித்தவுடன், சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு முன்னதாக, நீங்கள் அடிக்கடி ஒரு பிரத்யேக ஓட்டுநர் மைய சோதனைப் பகுதியில் அல்லது கார் பார்க்கிங்கில் ஓட்டுநர் பயிற்சி பெறுவீர்கள்.

சில ஓட்டுநர் பள்ளிகள் உங்களைச் சோதனைக்குத் தயார்படுத்துவதற்காக வாரத்திற்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை எடுக்க ஏற்பாடு செய்யலாம்.

ஓட்டுநர் சோதனைக்கு முன் நான் எத்தனை பாடங்களை எடுக்க வேண்டும்?

நீங்கள் எடுக்க வேண்டிய பாடங்களின் எண்ணிக்கை ஒரு எமிரேட்டிலிருந்து மற்றொரு எமிரேட்டிற்கு மாறுபடும். அபுதாபியில், முழு ஓட்டுநர் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதற்கு முன், நீங்கள் குறைந்தது எட்டு பாடங்களை எடுத்து தியரி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அபுதாபியில், பொதுவாக ஒரு முறை தேர்வு எழுத இரண்டு மணிநேரம் வழங்கப்படும்.

துபாயில் இது சற்று வித்தியாசமானது, அங்கு பாடங்களின் எண்ணிக்கை உங்கள் அனுபவத்தின் அளவைப் பொறுத்தது. கற்கும் ஓட்டுநர்கள் துபாயில் 20 மணிநேர பாடங்களுக்கு பதிவு செய்ய வேண்டும். இது வழக்கமாக தலா இரண்டு மணிநேரம் கொண்ட 10 பாடங்கள் வடிவில் எடுக்கப்படும்.

GCC அல்லது கோல்டன் விசா வைத்திருப்பவர்களில் வேறொரு நாட்டினால் வழங்கப்பட்ட முழு ஓட்டுநர் உரிமம் உள்ளவர்கள் பாடங்களைத் தவிர்த்துவிட்டு, நேரடியாக ஓட்டுநர் தேர்வை உடனடியாக எழுதலாம். இருப்பினும், அவர்கள் தோல்வியுற்றால், அவர்கள் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் முன் குறைந்தது நான்கு மணிநேர பாடங்களை எடுக்க வேண்டும்.

அதே போல், அபுதாபியில் இந்தியா போன்ற மற்றொரு நாட்டின் வாகன உரிமம் வைத்திருந்தால், பாடங்கள் கற்க வேண்டிய அவசியமின்றி நேரடியாக ஓட்டுநர் தேர்வில் பங்கேற்க ஒரு முறை கோல்டன் சான்ஸ் வழங்கப்படும்.

ஓட்டுநர் சோதனை முறை எவ்வாறு மேற்கொள்ளப்படும்?

எமிரேட்ஸ் டிரைவிங் இன்ஸ்டிடியூட் (EDI) இன் பயிற்றுவிப்பாளர் ஒருவர் கூற்றுப்படி, உங்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு முன் நீங்கள் மூன்று வெவ்வேறு சோதனைகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இவை எழுத்து தேர்வு, பார்க்கிங் சோதனை மற்றும் ஓட்டுநர் சோதனை ஆகியவை ஆகும். இவை ஒவ்வொன்றிற்கும் 290 திர்ஹம் செலவாகும். தியரி தேர்வு 35 பல தேர்வு கேள்விகளைக் கொண்டுள்ளது மற்றும் இதற்காக ஓட்டுநர் பயிற்சி பெறுமவர்கள் RTA கையேட்டை முன்கூட்டியே முழுமையாகப் படிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பார்க்கிங் சோதனையில் எமர்ஜென்சி ஸ்டாப், பாரலல் பார்க்கிங், கேரேஜ் பார்க்கிங் மற்றும் சற்று சாய்ந்த பகுதியில் பார்க்கிங் ஆகியவை அடங்கும். இதைத் தொடர்ந்து முக்கியப் பகுதியான ஆன்-ரோடு டிரைவிங் டெஸ்ட் மேற்கொள்ளப்படும்.

நபர்கள் ஏன் ஓட்டுநர் தேர்வில் தோல்வி அடைகிறார்கள்?

தங்கள் தேர்வில் தோல்வியடையும் பெரும்பாலான நபர்கள் சிறிய தவறுகளால் அவ்வாறு செய்கிறார்கள். இண்டிகேட்டர்களை சரியாகப் பயன்படுத்தாதது, பிரேக் செய்யும் போது மையக் கண்ணாடியை சரிபார்க்காமல் இருப்பது அல்லது ரிவர்ஸ் செய்யும் போது இரு தோள்களையும் சரிபார்க்காமல் இருப்பது போன்ற சிறிய தவறுகள் கூட தோல்விக்கான காரணங்களாக அமைகின்றன.

12 சிறிய தவறுகள் அல்லது ஒரு பெரிய தவறைப் பெற்றால் அவர் தோல்வியடைந்ததாகக் கருதப்படுவார். “ரவுண்டானாக்களில் அல்லது U- டர்ன் செய்யும்போது போக்குவரத்தை சரியாக மதிப்பிடாதது, வாகன நிறுத்தங்களில் வாகனத்தை நிறுத்தாமல் போவது போன்றவை பெரிய தவறுகளாக கருதப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுநர் உரிமம் எவ்வளவு செலவாகும்?

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான செலவு இரண்டு விஷயங்களைப் பொறுத்து மாறுபடும். நீங்கள் பாடம் எடுக்கும் ஓட்டுநர் பள்ளி மற்றும் உங்கள் அனுபவம். ஒவ்வொரு ஓட்டுநர் பள்ளியும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாடங்கள், சோதனைகளின் விலை மற்றும் உரிமம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பேக்கேஜ்களை வழங்குகிறது.

எடுத்துக்காட்டாக, EDI ஆனது, சொகுசு காரில் பாடம் எடுக்க விரும்புவோருக்கு Dh5,000 முதல் Dh22,000 வரையிலான பேக்கேஜ்களை வழங்குகிறது. உங்கள் தேர்வில் தோல்வியடைந்தால் விலை அதிகரிக்கும், ஏனெனில் மீண்டும் விண்ணப்பிக்கும் முன் குறைந்தது நான்கு மணிநேரம் பாடங்களை நீங்கள் எடுக்க வேண்டியிருக்கும்.

துபாய், அபுதாபியை போன்றே மற்ற எமிரேட்டுகளான ஷார்ஜா, ஃபுஜைரா, ராஸ் அல் கைமா, உம் அல் குவைன், அஜ்மான் போன்ற இடங்களிலும் ஒரு சில மாறுபாடுகள் இருக்குமேயன்றி மற்றவை பொதுவானதாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!