Uncategorized

அமீரகத்தில் குரங்கு அம்மை நோயின் முதல் தொற்று பதிவு ..!! உறுதி செய்த சுகாதார அதிகாரிகள்..!!

ஐக்கிய அரபு அமீரகம் முதல் முறையாக “மங்கிபாக்ஸ்” எனும் குரங்கு அம்மை நோய்த்தொற்றை பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 வயதான சுற்றுலாவாசி ஒருவருக்கு இந்த வைரஸ் கண்டறியப்பட்டதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர் தற்போது நாட்டில் தேவையான மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விசாரணை, தொடர்புத் தடமறிதல் மற்றும் பின்தொடர்தல் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவதாக அமைச்சகம் குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் குரங்கு அம்மை தொற்று பதிவாகியதையடுத்து செயல்படுத்தப்பட்ட சுகாதார அமைச்சகத்தின் ஆரம்பகால கண்காணிப்பு அமைப்பின் ஒரு பகுதியாக இந்த தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகம் இது குறித்து கூறுகையில் உலகளவில் குரங்கு அம்மைநோய் பரவுவதை கண்காணித்து வருவதாகவும் அதே சமயம் உள்ளூர் தொற்றுநோயியல் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.

வைரஸ் பரவுவதைத் தடுக்க, நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ மையங்களிலும் சந்தேகத்திற்கிடமான நோய் பாதிப்புகளை புகாரளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவிக்கையில்,  “சந்தேகத்திற்கிடமான நோயாளிகளைக் கண்டறிவதற்கான துல்லியமான வழிமுறைகளை நாங்கள் அமைத்துள்ளோம். தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, கண்காணிப்பு, நோயை முன்கூட்டியே கண்டறிதல், மருத்துவ ரீதியாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மேலாண்மை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான விரிவான வழிகாட்டியைத் தயாரித்துள்ளது” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அத்துடன்  வதந்திகளை விளம்பரப்படுத்தவோ அல்லது தவறாக வழிநடத்தவோ வேண்டாம் என்றும் அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறவும் அமைச்சகம் குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மே 24 நிலவரப்படி, உலக சுகாதார அமைப்பு 250 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் குரங்கு அம்மைநோய் தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது முக்கியமாக மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் ஏற்படுகிறது என்றும் எப்போதாவது மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது  என்றும் ஐக்கிய அரபு அமீரக சுகாதார அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்குடன் நெருங்கிய தொடர்பு மூலம் அல்லது வைரஸால் மாசுபட்ட பொருட்களுடன் இந்த நோய் மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்படுகிறது. காயங்கள், உடல் திரவங்கள், சுவாச நீர்த்துளிகள் மற்றும் படுக்கை போன்ற அசுத்தமான பொருட்களுடன் நெருங்கிய தொடர்பு மூலம் வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
error: Content is protected !!