வளைகுடா செய்திகள்

குடியிருப்பாளர்கள் அனுமதியின்றி மக்காவிற்குள் நுழைய தடை விதித்த சவூதி.!! – விசிட் விசாவில் நுழைபவர்கள் ஹஜ் மேற்கொள்ள அனுமதி இல்லை…

சவுதி அரேபியாவின் பொது பாதுகாப்பு பொது இயக்குநரகம் (General Directorate of Public Security) மே.15 முதல் நுழைவு அனுமதி இல்லாத குடியிருப்பாளர்களுக்கு மெக்கா செல்லும் சாலைகளில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் அனுமதி மறுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் புனித ஹஜ் யாத்திரையை ஒழுங்குபடுத்தும் அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே, மக்காவிற்குள் நுழைய விரும்பும் குடியிருப்பாளர்கள் இப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து நுழைவு அனுமதியைப் பெறுவது அவசியமாகும். குறிப்பாக, விசிட் விசாவில் சவூதிக்குள் நுழையும் நபர்கள் ஹஜ் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அத்துடன் விசிட் விசா 90 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் இந்த விசா ஹஜ் பங்கேற்பதற்கான அனுமதியை வழங்காது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆகையால், பார்வையாளர்கள் தங்கள் விசா நிபந்தனைகளைக் கடைபிடித்து விசா காலாவதி தேதிக்கு முன்னதாக அவர்கள் புறப்படுவதை உறுதி செய்யுமாறும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சவூதியின் ஹஜ் யாத்திரைக்கான விதிகளின் படி, இந்த அனுமதிகளைப் பெறாத வாகனங்கள் அல்லது வெளிநாட்டவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. அதேசமயம், புனிதத் தலங்களில் செல்லுபடியாகும் அனுமதி பெற்றுள்ள தொழிலாளர்கள், வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் உம்ரா அல்லது ஹஜ் அனுமதி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

உலகெங்கும் வசிக்கும் இஸ்லாமிய சமூகத்தினர் மக்காவை நோக்கி மேற்கொள்ளும் வருடாந்திர புனித யாத்திரையான ஹஜ் பயணம், அடுத்த மாதம் ஜூன் 26 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், ஹஜ்ஜுக்கு முந்தைய நாட்களில் சவுதி அரேபியாவின் பிறை பார்க்கும் குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, இந்த தேதி மாற்றத்திற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பாஸ்போர்ட் பொது இயக்குநரகம், புனித தலைநகர (Holy Capital) நுழைவு அனுமதிகளை வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்களை வீட்டுப் பணியாளர்கள், சவூதி அல்லாத குடும்ப உறுப்பினர்கள், மக்காவை தளமாகக் கொண்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், பருவகால வேலை விசா வைத்திருப்பவர்கள் மற்றும் ஹஜ் சீசன் 1444 AH க்கான “அஜீர்” அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் ஆகியோர் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோலவே, வீட்டுப் பணியாளர்கள் மற்றும் சவூதி அல்லாத குடும்ப உறுப்பினர்களுக்கான அனுமதிகளை “அப்ஷர்” தளத்திலும் பெறலாம். அதேவேளையில், மக்காவிற்கான நுழைவு அனுமதிகளை “முகீம்” எலக்ட்ரானிக் போர்டல் மூலம் அனைத்து ஏஜென்சிகளும் அணுக முடியும்.

இந்த புதிய சேவைகளானது நடைமுறைகளை ஒழுங்குபடுத்துதல், பயனாளிகளுக்கு நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ளதாகவும் பொது இயக்குநரகம் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!