அமீரக செய்திகள்

100 மில்லியன் டாலர் மதிப்பில் உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியை வழங்கவிருக்கும் அமீரகம்..!!

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது அவர்களின் உத்தரவைத் தொடர்ந்து உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவியை அமீரகம் அனுப்பவுள்ளது. ரஷ்ய-உக்ரைன் மோதலால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குடிமக்களுக்கு இந்த உதவி அனுப்பப்படும் என்று இது குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது அமீரக ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் கலந்துரையாடிய ஒரு நாளுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரஷ்யாவுடனான மோதலின் தாக்கத்தைத் தணிக்க அமீரகம் தொடர்ந்து மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கும் என்று ஷேக் முகமது அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் நெருக்கடி மோசமடைவதைத் தடுக்கவும், பேச்சுவார்த்தையை மேம்படுத்தவும் ஐக்கிய அரபு அமீரகம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவிற்காக ஷேக் முகமதுவுக்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.  இது பற்றி அமீரகத்தின் சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநில அமைச்சர் ரீம் அல் ஹாஷிமி, போர் காலங்களில் ஒற்றுமையின் முக்கியத்துவம் மற்றும் நெருக்கடியின் மனிதாபிமான தாக்கத்தை குறைக்க ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்வதில் ஷேக் முகமதுவின் நம்பிக்கைக்கு இணங்க இந்த கூடுதல் உதவி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் சபையின் அவசர வேண்டுகோள் மற்றும் உக்ரைனில் உள்ள பிராந்திய அகதிகள் திட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் போலந்து மற்றும் மால்டோவாவில் உள்ள உக்ரேனிய அகதிகளுக்கு ஆதரவாக உதவிகளை ஏற்றிச் செல்லும் விமானங்களை அனுப்புவது உட்பட, சமீபத்திய மாதங்களில் உக்ரைனுக்கு ஐக்கிய அரபு அமீரகம் இதே போன்ற பல உதவிகளை வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம், ஐக்கிய அரபு அமீரகமானது பல்கேரியா மற்றும் போலந்தில் தஞ்சமடைந்த உக்ரேனியர்களுக்கு உதவியை அனுப்பியது. அதே போன்று கடந்த மார்ச் மாதம், ஐநாவின் அவசர முறையீட்டைத் தொடர்ந்து உக்ரைனில் 5 மில்லியன் டாலர் மதிப்பிலான நிவாரணங்களை பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு வழங்குவதாகக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!