அமீரக செய்திகள்

அமீரக வேலையின்மை காப்பீடு திட்டம்.. இன்சூரன்ஸ் பணத்தை நாட்டிற்குள் இருந்தால் தான் பெற முடியுமா..?? அதிகாரி கூறுவது என்ன..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தை இந்த ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல் அமீரக அரசு கட்டாயமாக்கியது. மேலும் இந்த திட்டத்தில் இணைவதற்கு காலக்கெடுவையும் நிர்ணயித்து, காப்பீட்டு திட்டத்தில் இணையாத ஊழியர்கள் மீது ஜூலை மாதம் 1 ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் அமீரக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அமீரகத்தில் வேலை வாய்ப்பின்மை காப்பீட்டுத் திட்டத்தில் சந்தா பெற்ற ஒரு ஊழியர், வேலையை இழந்துவிட்டால் காப்பீட்டுப் பலன்களைப் பெற அமீரகத்தில் இருக்க வேண்டும் என்று உயர் அதிகரி ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அதாவது, இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டால், மூன்று மாதங்களுக்கு அவர்களின் அடிப்படை சம்பளத்தில் 60 சதவீத பணத்தைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்த 12 மாதங்களுக்குப் பிறகு நீங்கள் உங்கள் வேலையை இழந்துவிட்டீர்கள் மற்றும் நீங்கள் ஒரு விசிட்டராக இருந்தாலும் அல்லது (வேலை ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி) அமீரகத்தில் தங்கியிருந்தாலும் உங்களுக்கு மாதாந்திர அடிப்படையில், இழப்பீடு வழங்கப்படும் என்று துபாய் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அப்தெல்லதிஃப் அபுகுரா ஒரு பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும், மூன்று மாதத்தின் தொகையை ஒரே நேரத்தில் வழங்குவதில்லை என்றும் ஊழியர் நாட்டிற்குள் வசிக்கும் வரையிலும் வேறு வேலை கிடைக்காத வரையிலும் மட்டுமே ஒவ்வொரு மாத இறுதியிலும் பணம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காப்பீட்டு திட்டத்தின் பலன்களை எவ்வாறு பெறுவது?

இந்தத் திட்டத்தின் பலன்களை ஊழியர்கள் எவ்வாறு பெறலாம் என்ற கேள்விக்கு அபுகுரா பதிலளித்துள்ளார். அவரது கூற்றுப்படி, ஊழியர்களின் வேலை வகையைப் பொறுத்து, வெளிநாட்டவர்கள் தங்கள் வேலையை இழந்தால் மற்றும் அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டால் அமீரகத்தை விட்டு வெளியேற பொதுவாக ஒன்று முதல் ஆறு மாதங்கள் வரை அவகாசம் கிடைக்கும். இந்த காலங்களில் ஊழியருக்கு அடுத்த வேலை கிடைக்கும் வரையில் அல்லது அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் காப்பீட்டின் கீழ் பலன்களைப் பெறுவதற்கு, முதலில் நீங்கள் ப்ரீமியம் தொகையை (5 திர்ஹம்ஸ் அல்லது 10 திர்ஹம்ஸ்) தவறாமல் சரியான நேரத்தில் செலுத்தியிருக்க வேண்டும் என்றும் மேலும், ஒழுக்கம் தொடர்பான காரணத்தினால் வேலையை பறிகொடுத்திருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு காப்பீடு நன்மைகளைப் பெற்ற பிறகு மீதமுள்ள காப்பீட்டுக் கொள்கைகளைப் போலவே, அதுவும் காலாவதியாகி விடும். அதன் பிறகு ஊழியர்களுக்கு வேறு வேலை கிடைத்தால், அவர் காப்பீட்டுக் குழுவிலிருந்து புதிய பாலிசியை வாங்க வேண்டும் என்று அபுகுரா விளக்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு வேலை இழப்பு ஏற்பட்டால், காப்பீட்டு திட்டத்தின் பலனை பெற, ஊழியர்கள் 12 மாதங்களுக்கு சந்தா பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டத்தின்படி, அமீரகத்தில் காப்பீட்டாளரின் முழு பணி வாழ்க்கையின் போது சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், மொத்தம் 12 மாதங்களுக்கு மிகாமல் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கார் அல்லது ஹெல்த் இன்சூரன்ஸைப் போலவே, அதிக எண்ணிக்கையிலான மக்கள் வேலை இழப்பினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அவர்களுக்கு உதவும் வகையில் இந்த காப்பீட்டு திட்டம் இருக்கிறது என்று அபுகுரா கூறியுள்ளார். வேலையை இழக்கும் ஊழியர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை பெறுவதால், அமீரகத்தின் வேலை சந்தையில் உள்ள 6 மில்லியன் மக்களுக்கு காப்பீடு திட்டம் கட்டாயமாக இருப்பது பலனுள்ளதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!