அமீரக செய்திகள்

“நம்பிக்கையின் நகரம் துபாய்”..!! எக்ஸ்போவில் இசை நிகழ்ச்சியை நடத்தவிருக்கும் AR ரஹ்மான் பேட்டி..!!

எக்ஸ்போ 2020 துபாயில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் உலகளவில் பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பது ஆஸ்கார் விருது வென்ற AR ரஹ்மானின் வழிகாட்டுதலில் நடக்கவிருக்கும் ஃபிர்தவ்ஸ் இசைக்குழு (all-women orchestra) நிகழ்ச்சிதான்.

தற்போது இவர் துபாயில் தனது ஆல் வுமன் ஃபிர்தவ்ஸ் ஆர்கெஸ்ட்ரா அணிக்கு வழிகாட்டியாக உள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “இதில் ஓமான், சிரியா, ஈராக், லெபனான், குரோஷியா, ஆர்மீனியா உள்ளிட்ட உலகெங்கிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக இணைந்து ஒரு வியத்தகு அணியை உருவாக்கியுள்ளனர். மேலும், அனைவரும் ஒரு சகோதரியைப் போல ஒன்றிணைந்து புரிந்து செயல்படுகின்றனர். அவர்கள் ஒன்றிணைந்து அழகான இசை நிகழ்ச்சியை உங்களுக்கு தருவார்கள்” என அவர் கூறியுள்ளார்.

அத்துடன் துபாய் ஒரு “நம்பிக்கை அளிக்ககூடிய நகரம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “மத்திய கிழக்கு நாடுகள் பற்றி உலகம் சில கருத்துக்களைக் கொண்டுள்ளது. அங்குள்ள பெண்கள் வித்தியாசமானவர்கள். அவர்கள் இசையை இசைப்பதில்லை போன்ற பலவாறான கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால்  அப்படியல்ல. அவற்றுள் துபாய் ஒரு நம்பிக்கையளிக்ககூடிய இடம். நம்மால் முடியும், சாத்தியம், நாம் முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை துபாய் அளிக்கிறது. இது ஒரு பாராட்டப்பட வேண்டிய விஷயம்” என்று ஒரு பேட்டியின் போது ரஹ்மான் கூறியுள்ளார்.

“தொற்றுநோயால் ஏற்படும் சவால்கள் மற்றும் தாமதங்கள் இருந்தபோதிலும் துபாய் எக்ஸ்போவை திறம்பட திட்டமிட்டு செயல்படுத்திச்சென்றது என்னை மிகவும் கவர்ந்தது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், “நான் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக (எக்ஸ்போ) தளத்தைப் பார்க்கிறேன். நான் இங்கு பலமுறை வந்து சென்றிருக்கிறேன். கொரோனாவால் பின்னடைவுகள் இருந்தபோதிலும், அவர்கள் எக்ஸ்போவின் முழு உள்கட்டமைப்பு அமைப்பையும் மற்றும் விஷயங்களை எப்படி செய்வது என்பதற்கான திட்டங்களை துல்லியமாக தயார் செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

அவரது வழிகாட்டுதலின் கீழ், 23 வெவ்வேறு தேசியங்களைச் சேர்ந்த 50 பெண்களை ஒன்றிணைத்து, பல்வேறு இசை மரபுகளிலிருந்தும் மற்றும் ஓட் (oud), ரெபாபா (rebaba) மற்றும் தர்புகா (darbuka) போன்ற கருவிகளைப் பயன்படுத்தியும் இசை நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்போவின் ஆறு மாதங்கள் முழுவதும் எட்டு முதல் பத்து இசை நிகழ்ச்சிகளை இந்த இசைக்குழு நிகழ்த்தும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!