அமீரக செய்திகள்

துபாய்: தொழிலாளர்களுக்காக மலிவு விலையில் உயர்தர தயாரிப்புகளுடன் இரண்டு புதிய கம்யூனிட்டி மார்க்கெட்டுகள்..!! துபாய் முனிசிபாலிட்டியின் அடுத்த திட்டம்..!!

துபாயில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பலனளிக்கும் வகையில், துபாய் முனிசிபாலிட்டியானது தொழிலாளர்களுக்காக புதிதாக இரண்டு கம்யூனிட்டி மார்க்கெட்டுகளை அமைக்க உள்ளதாகவும் அத்துடன் ஏற்கனவே உள்ள ஒரு மார்க்கெட்டை புதுப்பிக்கவிருப்பதாகவும் குடிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

குடிமை அமைப்பு வெளியிட்ட தகவல்களின் படி, அல் கூஸ் 3 இல் 16,000-சதுரஅடியில் ஒரு மார்க்கெட்டும், முஹைசானா 2 இல் 9,200-சதுரஅடியில் இன்னொரு மார்க்கெட்டும் புதிதாக நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது. அதேசமயம், அல் கூஸ் 4 இல் 14,000-சதுர அடியில் தற்போதுள்ள மார்க்கெட் புதுப்பிக்கப்பட உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த சந்தைகளில், உள்ளூர் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகளை இலவசமாக வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே வேளை, சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தரங்களை கடைபிடிக்கும் கடைகளின் உயர்தர தயாரிப்புகள் அத்துனையும் மலிவு விலையில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, இங்கு காய்கறிகள், பழங்கள், இறைச்சி வகைகள், ஆடைகள், காலணிகள், வாசனை திரவியங்கள், மொபைல் போன்கள் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் போன்ற ஏகப்பட்ட பொருட்கள் போதிய விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. கூடுதலாக இந்த சந்தையில் சலூன்காரர் மற்றும் தையல்காரர்களும் கடை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பெரும்பாலும், நாள் முழுவதும் ஓயாது வேலைப் பார்த்துக் களைத்துப் போன தொழிலாளர்கள் இளைப்பாற சிறந்த இடமாக இந்த கம்யூனிட்டி மார்க்கெட் செயல்படுகிறது. பல தொழிலாளர்கள் அல் கூஸ் 4 இல் ஸ்னூக்கர் மற்றும் கேரம் கேம்களுக்கு 10 திர்ஹம்களுக்கும் குறைவான விலையில் விளையாடுகின்றனர். இது அவர்களுக்கு மனச்சோர்வைப் போக்கும் என கூறப்படுகின்றது.

துபாய் முனிசிபாலிட்டி மற்றும் காவல்துறை இணைந்து, கடந்த 2022 ஆம் ஆண்டில், தொழிலாளர் மண்டலத்தில் முதல் முறையாக உரிமம் பெற்ற மார்க்கெட்டை அறிமுகப்படுத்தியது. இது குறித்து கம்யூனிட்டி மார்க்கெட் பற்றி சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையின் இயக்குநர் டாக்டர் நசீம் ரஃபி அவர்கள் பேசுகையில், தொழில்துறை மண்டலங்கள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள தொழிலாளர் சமூக சந்தைகளை மேம்படுத்தும் திட்டத்தை துபாய் முனிசிபாலிட்டி உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தனித்துவமான ஷாப்பிங் அனுபவத்தை உருவாக்குவதன் மூலம், உயர்மட்ட பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!