வளைகுடா செய்திகள்

கத்தாரில் நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..! வெளிநாடுகளை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வந்ததாகத் தகவல்..

கத்தாரின் தலைநகரான தோஹாவில் நேற்று புதன்கிழமையன்று (மார்ச்.22) குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இது குறித்து கத்தாரின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய தோஹாவின் பின் திர்ஹாம் (Bin Dirham) பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததாகவும், இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததிருப்பதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

நேற்று காலை 8 மணியளவில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்குப் பிறகு, சிவில் பாதுகாப்பு மற்றும் காவல் துறையினர் அந்த இடத்தைச் சுற்றி வளைத்து இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான பணிகளில் ஈடுபட்டதாகவும், இடிபாடுகளில் சிக்கியவர்களில் ஏழு பேரை உயிருடன் மீட்டதாகவும் மீட்புக் குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணங்களை கண்டறியும் பணியை கத்தாரின் உள்துறை அமைச்சகம் (MoI) தொடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் அப்துல்லா கலீஃபா அல் முஃப்தா அவர்கள் ஊடகங்களிடம் பேசுகையில், சரியாக காலை 8:33 மணியளவில் அல் மன்சூராவின் பின் பின் திர்ஹாம் பகுதியில் உள்ள அல் குத்ரி தெருவில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது பற்றிய தகவல் கிடைத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ், போக்குவரத்து, அல் ஃபஸா மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் விவரித்துள்ளார்.

அத்துடன் காயமடைந்தவர்களின் நிலைமை லேசானது முதல் நடுத்தரமானது என்று கூறிய அவர், இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு தற்போது ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உளவியல் ரீதியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கலீஃபா அல் முஃப்தா தெரிவித்துள்ளார்.

இடிந்து விழுந்த கட்டிடத்தில் வெளிநாட்டில் இருந்து புலம்பெயர்ந்த குடும்பங்கள் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த கட்டிடத்திற்கு அருகில் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சியிலும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கட்டிட விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிப்பதாகவும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!