அமீரக செய்திகள்

துபாயில் நாளை நடக்கவிருக்கும் மாபெரும் “துபாய் ரன்” ஓட்ட பந்தயம்..!! ஷேக் சையத் சாலை மூடல்..!! மாற்று வழி என்ன..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை பேணும் விதமாக துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மது அவர்களால் தொடங்கப்பட்ட துபாய் பிட்னெஸ் சேலஞ்சின் ஒரு பகுதியாக நடத்தப்படும் மாபெரும் ஓட்ட பந்தயமான “துபாய் ரன்” நாளை நவம்பர் 26 வெள்ளிக்கிழமை நடைபெறவிருப்பதை முன்னிட்டு துபாயின் பல முக்கிய சாலைகள் மூடப்படுவதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது.

கடந்த 2019 ம் ஆண்டு துபாயின் மிகவும் பிஸியான உலக புகழ்பெற்ற ஷேக் சையத் சாலையில் நடைபெற்ற துபாய் ரன் ஓட்ட பந்தயத்தில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதை போன்று இந்த வருடமும் பல்லாயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர். இதனை முன்னிட்டு ஷேக் சையத் சாலையின் முக்கிய சில பகுதிகள் தாற்காலிகமாக ஆறு மணி நேரம் வரை மூடப்படவுள்ளது. இதனால் பந்தயத்தின் போது மாற்று சாலைகளைப் பயன்படுத்த துபாய் காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு சமூக ஊடகங்களில் அறிவுறுத்தியுள்ளது.

துபாய் ரன் ஓட்ட பந்தயத்தை முன்னிட்டு தற்காலிகமாக மூடப்படும் சாலைகள் பின்வருமாறு:

>> துபாய் வேர்ல்டு டிரேட் சென்டர் ரவுண்டானா (Dubai World Trade Centre roundabout) முதல் துபாய் மால் மேம்பாலத்தின் முதல் இன்டெர்சேஜ் (first interchange of Dubai Mall bridge) வரையிலான ஷேக் சையத் சாலை அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை மூடப்படும். இதற்கான மாற்று வழி சாலைகள் மேல்மட்ட ஃபைனான்சியல் சென்டர் சாலை (upper Financial Centre Road) வழியாக அல் கைல் சாலை மற்றும் அல் சஃபா ஸ்ட்ரீட் வழியாக அல் வாசல் சாலை ஆகியவை அடங்கும்.

>> கீழ்மட்ட ஃபைனான்சியல் சென்டர் ரோடு (lower Financial Centre Road) இருபுறமும் அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை மூடப்படும். மேல்மட்ட ஃபைனான்சியல் சென்டர் சாலையை மாற்று சாலையாக பயன்படுத்தலாம்.

>> ஷேக் முஹம்மது பின் ரஷித் பவுல்வார்டு சாலை அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை மூடப்படும். அதற்குப் பதிலாக வாகன ஓட்டிகள் புர்ஜ் கலிஃபா ஸ்ட்ரீட் வழியாக செல்லலாம்.

>> 2 வது ஜாபீல் சாலை (2nd Za’abeel Road) மற்றும் ஃபைனான்சியல் சென்டர் சாலை இடையேயான அல் முஸ்தக்பால் ஸ்ட்ரீட் (Al Mustaqbal Street) காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை மூடப்படும். இதற்கான மாற்று வழி சாலை அல் சுகூக் ஸ்ட்ரீட் (Al Sukouk Street) மற்றும் அல் போர்சா ஸ்ட்ரீட் (Al Boursa Street) ஆகும்.

நாளை நடைபெறவுள்ள துபாய் ரன் ஓட்ட பந்தயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஓட்ட பந்தயத்தில் குறிப்பாக 5 கிமீ பாதை குடும்பங்களாக கலந்துகொள்ளும் மக்களுக்காகவும் மற்றும் 10 கிமீ பாதை பொழுதுபோக்கு மற்றும் தொழில்முறை ஓட்டப்பந்தய வீரர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

துபாய் ரன் ஓட்ட பந்தயத்தில் கலந்துகொள்ளும் மக்கள் மேற்கூறப்பட்ட ஓட்ட பாதையின் வழியாக செல்லும்போது துபாய் மியூசியம், எமிரேட்ஸ் டவர்ஸ், டவுன்டவுன் துபாய், துபாய் மால், புர்ஜ் கலீஃபா மற்றும் ஷேக் முஹம்மது பின் ரஷித் பவுல்வார்டு ஆகிய துபாயின் புகழ்பெற்ற அடையாள சின்னங்களை காணமுடியும்.

இதற்கு முன்னதாக நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இந்த மாபெரும் ஓட்ட பந்தயத்தில் தன்னுடன் சேர்ந்து ஓட அமீரக குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மது அவர்கள் தனது சமூக ஊடக பக்கத்தின் மூலம் அழைப்பு விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!