அமீரக செய்திகள்

துபாய் ஏர்போர்ட்டில் நவம்பர் மாதம் முதல் பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்கலாம்.. பயணிகளுக்கு காத்திருக்கும் புதிய அனுபவம்..!!

துபாய் இன்டர்னேஷனல் ஏர்போர்ட்டை பயன்படுத்தும் விமானப் பயணிகள் வெகுவிரைவில் பாஸ்போர்ட் இல்லாத பயணத்தை அனுபவிக்க உள்ளனர். அதாவது வரும் நவம்பர் மாதம் முதல் துபாய் ஏர்போர்ட் டெர்மினல் 3 வழியாக பயணிக்கும் பயணிகள் தங்களுடைய பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தும் வகையில் புதிய அமைப்பு நடைமுறைக்கு வரும் என GDRFA இன் துணை இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ஒபைத் முஹைர் பின் சுரூர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் தலைமை இயக்க அதிகாரி அடெல் அஹ்மத் அல் ரெதா அவர்கள் கூறுகையில், நடப்பு ஆண்டின் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில், விமானப் பயணிகள் பாஸ்போர்ட் தேவையின்றி பயோமெட்ரிக்ஸ் மற்றும் முக அங்கீகாரம் ஆகியவற்றின் மூலம் சுமூகமான பயண அனுபவத்தைப் பெறலாம் என்றும் கூறியுள்ளார்.

துபாய் ஏர்போர்ட்ஸ் கடந்த சில வருடங்களாகவே பாஸ்போர்ட் இல்லா பயணத்திற்கான இத்திட்டத்தில் வேலை செய்து வருவதாகவும், குறிப்பாக பயணிகள் முழுமையான தொடுதலற்ற பயணத்தை அனுபவிக்க சமீபத்திய பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் துறைமுகங்களின் எதிர்காலக் கொள்கைகளை வடிவமைப்பதற்கான உலகளாவிய மாநாட்டின் முதல் நாளில் பேசும் போது, ​​விமான நிலையங்களில் பயணத்தை சீராகவும், தடையற்றதாகவும், வேகமாகவும் மாற்றுவதற்கு பாஸ்போர்ட்டுக்குப் பதிலாக பயணிகளின் முகம் மற்றும் கைரேகையே அவர்களின் அடையாளமாக பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அதே போன்று, விமான நிலையத்தில் பயணிகளின் இயக்கத்தை விரைவுபடுத்த விமான நிலையங்களுக்கிடையேயான தரவுகளை பகிர்ந்து கொள்ளுமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கூடவே, பயணிகள் குறைவான செயல்முறையை விரும்புவதாகவும், எனவே ஒவ்வொரு பயணிகளின் தகவல்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எனவே, மற்ற நாடுகளின் அரசாங்கங்கள் தரவுகளை பரிமாறிக் கொண்டால், சர்வதேச பயணிகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல தங்கள் சொந்த பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தலாம். குறிப்பாக, தகவல்களைச் சேகரிப்பதிலும், செயல்முறைகளை மேம்படுத்த தரவுகளைப் பயன்படுத்துவதிலும் AI முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் விமானப் போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் சவால்களுக்கு இத்தகைய தொழில்நுட்பமே தீர்வு என்றும் அடெல் அல் ரெதா வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், விமான நிலையத்தின் உள்கட்டமைப்பு குறைவாக இருப்பதால் செக்-இன் கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்காது என்பதைத் தெரிவித்த அல் ரெதா, இந்த சவாலை எதிர்கொள்ள ஒரே வழி தடையற்ற செயல்பாடுகளை மேற்கொள்வதுதான் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் விமான நிலையங்கள் 90 சதவீதம் தானியங்கி செயல்முறையையும், 10 சதவீதம் மனித தொடர்புகளையும் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!