அமீரக செய்திகள்

அமீரகம் முழுவதும் 50 திரையரங்குகளைத் திறக்கும் லுலு குழுமம்!! நூற்றுக்கணக்கில் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவுள்ளதாகவும் தகவல்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தைத் தளமாகக் கொண்ட லுலு குழுமம், அமீரகம் முழுவதும் 50 திரையரங்குகளைத் திறக்கவுள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

லுலு குரூப் இன்டர்நேஷனலின் (Lulu Group International) ஷாப்பிங் மால் மேம்பாடு மற்றும் நிர்வாகப் பிரிவான Line Investments & Property, ஸ்டார் சினிமாஸ் (Star Cinemas) உடன் கூட்டு சேர்ந்து, அரபு, இந்தி, ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் திரைப்படங்களைக் காண்பிக்கும் திரையரங்குகளை நிர்வகிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு லுலு குரூப் இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனரான M.A அஷ்ரஃப் அலி என்பவர் பேசுகையில், லுலு குழுமத்திடம் ஏற்கனவே மால்களில் திரையரங்குகள் இருந்தாலும், இப்போது ஸ்டார் சினிமாஸுடனான கூட்டாண்மையின் மூலம் விரிவுபடுத்துவதாகக் கூறியுள்ளார். ஏனெனில் அனைத்துப் படங்களையும் ஸ்டார் சினிமாஸ் வளைகுடா நாடுகளுக்கு கொண்டு வருவதால், திரையரங்குகளில் பல்வேறு மொழிப் படங்களை திரையிட்டு வெற்றிகரமாக இயக்க இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், லுலு குழுமம் 50 க்கும் மேற்பட்ட திரையரங்குகளை திட்டமிடுவதால், வேலைக்கு ஒரு கணிசமான அளவு ஆட்கள் தேவைப்படுவதாகவும், ஒவ்வொரு திரையரங்கிற்கும் குறைந்தபட்சம் 25-30 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து திரையரங்குகளையும் நிர்வகிக்க மொத்தம் 1,500 பணியாளர்கள் வரை தேவைப்படுவதாக அலி கூறியுள்ளார்.

குறிப்பாக, திரை எண்ணிக்கையின் அடிப்படையில், அமீரகத்தில் இரண்டாவது பெரிய திரையரங்க ஆபரேட்டராக ஸ்டார் சினிமாஸ் திகழ்வதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே, ஸ்டார் சினிமாஸ் மூலம் இயக்கப்படும் 76 திரைகளுக்கு கூடுலாக 22 திரைகளைத் திறக்க லைன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் & பிராப்பர்ட்டி மற்றும் ஸ்டார் சினிமாஸ் ஆகியவை கடந்த வாரம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்நிகழ்ச்சியில் M.A. அஷ்ரப் அலியுடன் ஃபார்ஸ் பிலிம் & ஸ்டார்ஸ் சினிமாவின் நிறுவனரும் தலைவருமான அகமது கோல்சின் என்பவரும் மற்றும் பிற அதிகாரிகளும் கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் படி, அல் ரஹா மாலில் 3 திரைகளும், அல் வஹ்தா மாலில் 9 திரைகளும், அல் ஃபோஹ் மாலில் 6 திரைகளும், பராரி அவுட்லெட் மாலில் 4 திரைகளும் செப்டம்பர் 2023 இல் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதுபோல, துபாய் சிலிக்கான் ஒயாசிஸ் மால், ஷார்ஜா சென்ட்ரல் மால் மற்றும் ராஸ் அல் கைமாவில் உள்ள RAK மால் ஆகியவற்றில் ஸ்டார் சினிமாஸ் திரையைத் திறப்பதற்கும் இந்த ஒப்பந்தம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கூடிய விரைவில் துபாய் சிலிக்கான் ஒயாசிஸில் பணிகள் தொடங்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து ஷார்ஜா சென்ட்ரல் மற்றும் RAK மால் ஆகியவற்றிலும் தொடங்கும் என்று கோல்சின் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!