அமீரக செய்திகள்

50 டன் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை பாலஸ்தீனத்திற்கு அனுப்பும் லுலு குழுமம்!! போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்க நடவடிக்கை…

அபுதாபியைத் தலைமையிடமாகக் கொண்ட லுலு குழுமம், பாலஸ்தீனத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான நிவாரணம் வழங்குவதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

இந்த குழுமத்தின் எகிப்தியன் யூனிட், 50 டன் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள், போர்வைகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய முதல் தொகுதி உதவியை எகிப்திய செஞ்சிலுவை (Egyptian Red Crescent) அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எகிப்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் CEO டாக்டர் ரமி அல் நாசர் அவர்கள், பாலஸ்தீனியர்களுக்கு சரியான நேரத்தில் ஆதரவளிப்பதற்காக லுலு குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான எம்.ஏ. யூசுபலி மேற்கொள்ளும் இத்தகைய முயற்சிகளுக்கு தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது; “பாலஸ்தீனத்தில் உள்ள எங்கள் சகோதரர்களுக்கு உதவிகளை வழங்க எகிப்திய செஞ்சிலுவைச் சங்கம் மேற்கொண்ட முயற்சிகளின் வெளிச்சத்தில், எம்.ஏ. யூசுபலி பிரதிநிதித்துவப்படுத்தும் லுலு குழுமத்துடன் புதிய கூட்டாண்மையை நாங்கள் பெற்றுள்ளோம், அவருக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீன மக்களுக்கு 50 டன் நிவாரண உதவிகள் மற்றும் உணவுப் பொருட்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்த அல் நாசர், லுலு குழுமம் எங்களின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப உதவிகளை தயார் செய்ய ஆர்வமாக இருப்பதாகக் கூறினார்.

மேலும், எகிப்தின் எல் அரிஷ் நகருக்கு முதல் கான்வாய் புறப்பட்டிருப்பதாகவும், பின்னர் அங்கிருந்து அவற்றை பாலஸ்தீன மக்களுக்கு எடுத்துச் செல்ல வழக்கமான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் அல் நாசர் லுலு குழுமத்தின் இயக்குனர் (எகிப்து மற்றும் பஹ்ரைன்) ஜூசர் ருபாவாலா, பிராந்திய இயக்குனர் ஹுசேபா குரேஷி மற்றும் லுலு எகிப்து மேலாளர் ஹாதிம் சயீத் ஆகியோரிடமிருந்து உதவியை பெற்றார்.

அப்போது பேசிய சயீத், “பாலஸ்தீன மக்களுக்கு முன்னெப்போதையும் விட இப்போது எங்கள் உதவி தேவைப்படுவதால் நாங்கள் இந்த ஒத்துழைப்பைத் தொடங்குகிறோம், இது கடினமான மனிதாபிமான நிலைமைகளின் போது பாலஸ்தீன மக்களுடனான நமது சமூகப் பொறுப்பு மற்றும் ஒற்றுமையை உறுதிப்படுத்துகிறது.” என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல், அமீரகத்தின் ‘Tarahum for Gaza’ நிவாரணப் பிரச்சாரத்தின் முக்கிய பங்காளியாகவும் லுலு குழுமம் உள்ளது, மேலும் Emirates Red Crescent உடன் இணைந்து பல உதவிப் பொருட்களை சேகரித்து அனுப்புவதற்காக பல்வேறு லுலு ஹைப்பர் மார்க்கெட்டுகளில் சிறப்பு உதவி மையங்களை அமைத்துள்ளது.

குறிப்பாக, லுலு குழுமம் மற்ற வளைகுடா நாடுகளை சார்ந்த மனிதாபிமான நிறுவனங்களுடன் இதே போன்ற முயற்சிகளுக்காக வேலை செய்து வருகிறது. கடந்த வாரம், பஹ்ரைனில் உள்ள லுலு குழுமம் பஹ்ரைன் தேசிய பிரச்சாரத்தை ஆதரிக்கும் ராயல் மனிதநேய அறக்கட்டளைக்கு 25,000 பஹ்ரைன் தினார்களை நன்கொடையாக வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!