அமீரக செய்திகள்

அமீரகம் பற்றிய ஒரு வார்த்தை.. உங்களின் சொந்த குரலில் அமீரக தேசிய கீதம்.. தேசிய தினக் கொண்டாட்டத்தில் இணைய பொதுமக்களுக்கு அழைப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரவிருக்கும் 49 வது தேசிய தினத்தை முன்னிட்டு அமீரகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கின்றது. அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் முக்கிய சாலைகள் முழுவதிலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தேசிய தினத்திற்கு இன்னும் சிறிது நாட்களே இருக்கும் நிலையில் அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு குடியிருப்பாளர்களுடன் கொண்டாடும் விதமாக ஒரு பிரத்யேக அதிகாரப்பூர்வ வலைத்தள (uaenationalday.ae) பக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாட்டுக்குழுவானது, குடியிருப்பாளர்களை அமீரகத்தின் தேசிய கீதத்தை தங்களின் சொந்த குரலில் பதிவு செய்து வலைதளப்பக்கத்தில் பகிருமாறு கேட்டுக்கொண்டுள்ளது. அமீரக தேசிய கீதத்தின் முதல் இரண்டு சொற்களான “Eishy Bilady” என்பதை தலைப்பாகக் கொண்ட பிரச்சாரத்தின் கீழ் குடியிருப்பாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாக இது செயல்படுத்தப்படவுள்ளது.

அதேபோல், குடியிருப்பாளர்கள் இந்த வலைதள பக்கத்தில் சென்று ஐக்கிய அரபு அமீரகம் பற்றிய தங்களின் கருத்தை ஒரு வார்த்தையில் கூறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலை தள பக்கத்தில் Join Celebration என்றதன் கீழ் தங்களின் சொந்த குரலில் தேசிய கீதத்தை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் Video Submission என்பதையும், அமீரகம் பற்றி ஒரு வார்த்தையில் தெரிவிக்க விரும்புபவர்கள் Word Submission என்பதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் உங்கள் விபரங்களை கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.

தங்களின் சொந்த குரலில் தேசிய கீதத்தை பதிவு செய்பவர்கள் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருக்கும் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்கள் (@OfficialUAEND) வழியாகவும் #Eishy_Bilady என்ற டேக்கை பயன்படுத்தி சமர்ப்பிக்கலாம் என்றும், அனைத்து வயதினரும், நாட்டினரும், எந்த பாகுபாடுமின்றி இதில் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 2 ஆம் தேதி அபுதாபியில் நடைபெறும் நாட்டின் அதிகாரப்பூர்வ தேசிய தின நேரடி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனுப்பியிருக்கும் பதிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் ஒளிபரப்பப்படும் என்றும், சமர்ப்பிப்புகள் அதிகாரப்பூர்வ தேசிய தின சமூக ஊடக சேனல்களிலும் பலவிதமான வீடியோக்களில் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ 49 வது ஐக்கிய அரபு அமீரக தேசிய தின கொண்டாட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் கல்பன் அல் மஸ்ரூய் அவர்கள் கூறுகையில், “பொது கொண்டாட்டங்களுக்கு கோவிட் -19 கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், தேசிய கீதத்தின் இந்த செயல்திறன் நாடு முழுவதும் மக்கள் தேசிய கீதத்தின் மூலம் ஒன்றுபடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தங்களின் வாய்ஸ் ரெகார்டினை வலைத்தளத்திற்கு சென்று எவ்வாறு சமர்ப்பிப்பது என்பதற்கான வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பொது மக்கள் இதில் நவம்பர் 30 வரை மட்டுமே பங்கேற்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு புதிய அனுபவமாக தேசிய தினத்தை கொண்டாடும் நேரடி நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அபுதாபியில் அரங்கேற்றப்படவிருக்கும் இந்த நிகழ்ச்சியை ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும், இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தேசிய தின கொண்டாட்டத்தில் ஒன்றுபட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

“Seeds of the Union” எனப் பெயரிடப்பட்ட இந்நிகழ்ச்சியில், கடந்த 49 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொண்ட பயணத்தை கலை ரீதியாக சித்தரிக்கும் விதமாக டிஜிட்டல் காட்சிகளால் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!