அமீரக செய்திகள்

UAE: மோசடி கும்பலால் 21 மில்லியன் திர்ஹம்களை இழந்த அமீரகவாசிகள்.. பணத்தை மீட்டு உரியவர்களுக்கே கொடுத்த காவல்துறை..!!

அபுதாபியில் கடந்த ஏழு மாதங்களில் தொலைபேசி மோசடிகள் மற்றும் பிற இணைய குற்றங்கள் உட்பட நிதி மோசடியால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்த நபர்களின் 21 மில்லியன் திர்ஹம்களை அபுதாபி காவல்துறையினர் திருப்பி அளித்துள்ளதாக அதிகாரிகள் திங்களன்று அறிவித்துள்ளனர்.

காவல்துறையின் குற்றவியல் பாதுகாப்புப் பிரிவில் நிதி மோசடி புகார்களைக் கையாளும் புதிய தொடர்பு மையத்தின் மூலம் இந்த பணம் திரும்பப் பெறப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய கால் சென்டர், நிதிக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முடுக்கிவிட்டதன் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அபுதாபியில் துவங்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

மக்களை விழிப்புணர்வு செய்வதற்காக ‘கவனமாக இருங்கள் (be careful)’ எனும் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கான செய்தியாளர் சந்திப்பின் போது, ​​அபுதாபி காவல்துறையின் மோசடி தடுப்பு பிரிவுத் தலைவர் மேஜர் முஹம்மது அல் ரயான், புதியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கால் சென்டர் மூலம் ஆகஸ்ட் 2021 முதல் மார்ச் 2022 வரை 1,740 நிதி மோசடி புகார்களைப் பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், “புதிய தொடர்பு மையம் தொடங்கப்பட்டதில் இருந்து நிதி மோசடியை தடுப்பதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் மோசடி செய்பவர்களைக் கண்காணிக்க வங்கிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் “புதிய கால் சென்டர் மூலம் புகாரளிக்கப்பட்ட நிதி மோசடி வழக்குகளில் 80 முதல் 90 சதவிகித வழக்குகளுக்கு பணத்தை மீட்டெடுக்க முடிந்தது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த மையம் காவல் துறை அதிகாரிகளை வங்கிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவும், வங்கி வாடிக்கையாளர்களை சுரண்டும் நிதி மோசடி மற்றும் ஏமாற்றுபவர்கள் பற்றிய அறிக்கைகளைப் பெறவும் உதவுகிறது” என்று அல் ரயான் கூறியுள்ளார்.

புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில், குடியிருப்பாளர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தெரியாத நபர்களுக்கு பாஸ்வேர்டு அல்லது எமிரேட்ஸ் ஐடியை வழங்க வேண்டாம் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

மேலும் “மக்கள் தங்கள் வங்கி விவரங்கள் மற்றும் ஆன்லைன் பேங்க் பாஸ்வேர்டு, ATM பின்கள், பாதுகாப்பு எண்கள் (CCV), பாஸ்வேர்டு அல்லது எமிரேட்ஸ் ஐடி விவரங்கள் என யாருடனும் தங்கள் ரகசியத் தகவலைப் பகிரக்கூடாது” என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான செய்திகளையோ அல்லது அழைப்புகளையோ பற்றி புகாரளிக்க விரும்பினால் மக்கள் 800 2626 என்ற எண்ணில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அபுதாபி காவல்துறையின் ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாகவோ தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!