அமீரக செய்திகள்

துபாயின் புதிய வாடகை ஒப்பந்த விதி யாருக்கு..?? எப்படி பதிவு செய்வது..??

துபாய் லேன்ட் டிபார்ட்மென்ட் (DLD) ஆனது, கடந்த வெள்ளிக்கிழமையன்று, துபாயில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களின் உரிமையாளர்கள், டெவலப்பர்கள், சொத்து மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் வில்லா அல்லது ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்தவர்கள் என துபாயில் தங்கியிருக்கும் அனைவரும், தங்களுடன் சேர்ந்து தங்கியிருக்கும் சக குடியிருப்பாளர்களின் விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

மேலும் இதனை துபாய் லேண்ட் டிபார்ட்மென்ட்டிற்கு சொந்தமான துபாய் REST மொபைல் அப்ளிகேஷன் மூலம் பதிவு செய்யலாம் எனவும், அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்குள் உடனடியாக இது நடைமுறைக்கு வர வேண்டும் என்றும் துபாய் குடியிருப்பாளர்களுக்கு துபாய் லேன்ட் டிபார்ட்மென்ட் கெடு விதித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரு இடத்தில் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் தங்கியிருக்கும் அனைத்து சக குடியிருப்பாளர்களும் இந்த புதிய விதிமுறைகளின்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த ரிஜிஸ்டரேஷன் பின்வருவனவற்றை உள்ளடக்கும். அவை:

  • உடன் தங்கியிருப்பவரின் பெயர்
  • எமிரேட்ஸ் ஐடி எண்
  • பாஸ்போர்ட் எண் (உடன் தங்கியிருப்பவருக்கு எமிரேட்ஸ் ஐடி இல்லை என்றால்).

இவ்வாறு தங்கியிருக்கும் சக குடியிருப்பாளர்கள் இந்த ரிஜிஸ்டரேஷனை வசிப்பிட ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்றும், ஆனால் அரசாங்க பரிவர்த்தனைகளின் போது Tenancy Contract எனும் வாடகை ஒப்பந்தத்திற்குப் பதிலாக இதனை பயன்படுத்த முடியாது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் சக குடியிருப்பாளர்களின் பதிவு கட்டாயம் என்றாலும், வாடகை ஒப்பந்தத்தில் அவர்களின் அனைத்து பெயர்களையும் குறிப்பிட தேவையில்லை என்றும் DLD கூறியுள்ளது.

Dubai REST அப்ளிகேஷனில் பதிவு செய்யும் முறை

>> குடியிருப்பாளர்கள் இந்த அப்ளிகேஷனை ஓப்பன் செய்து உள்நுழைய UAE PASS-ஐ பயன்படுத்தலாம்.

>> அவர்கள் உள்நுழைந்ததும், அவர்கள் வசிக்கும் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

>> பின் ‘Co-Occupants’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்; ‘Add more’ என்பதைக் கிளிக் செய்யவும்; மற்றும் அவர்களின் விவரங்களை உள்ளிடவும்.

>> இந்த செயல்முறை குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அல்லது ஒரு இடத்தில் வசிக்கும் மற்ற சக குடியிருப்பாளர்களுக்கும் செய்யப்பட வேண்டும்.

>> மேலும் ‘Delete’ ஐகானைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரு சக குடியிருப்பாளரை அகற்றலாம்.

துபாயில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களின் விரிவான புள்ளிவிவரப் பதிவை உருவாக்க ஆணையம் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவதாக இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துபாயில் அதிகரித்து வரும் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளின்  தேவைகளுக்கு பதிலளிக்கும் நோக்கில் அரசாங்க நிறுவனங்களை ஆதரிப்பதே இதன் நோக்கம் என்றும் DLD அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

துபாய் புள்ளியியல் மைய இணையதளத்தில் உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 3.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் துபாயில் நிரந்தர குடியிருப்பாளர்களாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கால கட்டத்தின் போதும், துபாயின் மக்கள் தொகை 2020 முதல் தற்போது வரை 100,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் 2040 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 5.8 மில்லியனை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!