வளைகுடா செய்திகள்

எண்ணெய் கசிவு காரணமாக குவைத்தில் அவசர நிலையை அறிவித்துள்ள எண்ணெய் நிறுவனம்..!!

குவைத் நாட்டில் இன்று திங்களன்று நிலத்தில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து குவைத் எண்ணெய் நிறுவனம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. எண்ணெய் கசிவு ஏற்பட்ட போதிலும் இதன் விளைவாக, யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை என்றும் உற்பத்திக்கு இடையூறும் ஏற்படவில்லை என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் குவைத் நாட்டின் மேற்கு பகுதியில் இந்த எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகவும், அதனை தொடர்ந்து அவசரநிலை அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக குவைத் எண்ணெய் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் குசாய் அல்-அமெர் என்பவர் தெரிவிக்கையில், எண்ணெய் கசிவு காரணமாக பொதுமக்கள் எவருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை மற்றும் எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இதனால் நச்சுப் புகைகள் எதுவும் பதிவாகவில்லை என்றும், இந்த கசிவு நிலத்தில் ஏற்பட்டதே தவிர குடியிருப்பு பகுதிகளில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காடியுள்ளார். அத்துடன் எண்ணெய் கசிவு ஏற்பட்ட சரியான இடத்தைத் தெரிவிக்க மறுத்த அல்-அமெர், கசிவின் மூலத்தைக் கண்டறியவும், சம்பவத்தைக் கட்டுப்படுத்தவும் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தும் ஒரு பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி, பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் (OPEC) உள்ள முக்கிய உறுப்பினரான குவைத், தற்போது ஒரு நாளைக்கு சுமார் 2.7 மில்லியன் பீப்பாய்களுக்கு எண்ணெய்யை உற்பத்தி செய்து வருகிறது.

ஏற்கனவே, குவைத் ஆயில் நிறுவனம் 2020 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இதுபோன்று தனது வயல்களில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!