அமீரக செய்திகள்

துபாய்: பயணிகளுடன் பறக்கவிருக்கும் ஏர் டாக்ஸி.. அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வீடியோவை வெளியிட்ட ஆட்சியாளர்..!!

எதிர்காலத்தில் போக்குவரத்து எப்படி இருக்க போகின்றது என்பதை கடந்த சில மாதங்களுக்கு முன் “Flying car” மூலம் உலகுக்கே தெரியப்படுத்திய அமீரகமானது தற்பொழுது அதே போன்றதொரு போக்குவரத்தை நடைமுறையிலும் கொண்டு வர இருக்கின்றது. அதாவது துபாயில் இனி குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் கூடிய விரைவிலேயே புதிய ஏர் டாக்ஸி மூலம் பயணிக்கலாம்.

இதனையொட்டி இந்த ஏர் டாக்ஸிகளுக்கான நிலையங்களை (vertiport) வடிவமைக்க ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவர் தற்பொழுது ஒப்புதல் அளித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், மூன்று ஆண்டுகளில் அமீரகத்தில் ஏர் டாக்சிகள் இயங்கத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், துபாய் முழுமையாக வளர்ந்த வெர்டிபோர்ட் (vertiports) நெட்வொர்க்கைக் கொண்ட உலகின் முதல் நகரமாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏர் டாக்சிகள் அதிகபட்சமாக 241 கிமீ ரேஞ்சில் (range) மணிக்கு 300 கிமீ வேகத்தில் செல்லும் என்றும் இதில் ஒரு பைலட் மற்றும் நான்கு பயணிகள் அமர்ந்து இருப்பார்கள் என்றும் தகவல் கூறப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டமாக இந்த ஏர் டாக்ஸியானது துபாயின் நான்கு முக்கிய பகுதிகளை இணைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை:

  • துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில்
  • டவுன்டவுன் துபாய்
  • பாம் ஜுமேரா 
  • துபாய் மெரினா.

ஷேக் முகமது அவர்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக அரசாங்க உச்சிமாநாட்டில் (WGS) கலந்து கொண்ட போது இதன் வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஒரு பதிவின் படி, சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) முன்னணி நிறுவனங்களான Skyports Infrastructure மற்றும் Joby Aviation உடன் இணைந்து செங்குத்தாக புறப்படும் மற்றும் தரையிறங்கும் (eVTOL) செயல்பாடுகளை கொண்ட புதிய துவக்கத்திற்கான எலக்ட்ரிக் ஏர் டாக்ஸியின் உள்கட்டமைப்பை வடிவமைத்து மேம்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் 2026க்குள் புர்ஜ் கலீஃபா, துபாய் ஃபிரேம் மற்றும் புர்ஜ் அல் அரப் போன்ற பிரபலமான துபாயின் இடங்களில் ஏர் டாக்சிகள் பறக்கும் வகையிலான வீடியோ ஒன்றும் ஷேக் முகம்மது அவர்களால் பகிரப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியான தகவலின்படி துபாய் சர்வதேச விமான நிலையம் அருகே முதல் ஆடம்பரமான வெர்டிபோர்ட் வரும் என்றும் ஏர் டாக்சிகளுக்கான முனையமாக (terminal) அதன் மேற்கூரை செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையமானது குளிரூட்டப்பட்ட பாலம் வழியாக எமிரேட்ஸ் மெட்ரோ நிலையத்துடன் இணைக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் கார் பார்க்கிங்கிற்கான இரண்டு நிலைகளை உள்ளடக்கிய இந்த வெர்டிபோர்ட் ஒரு சமகால வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது வான்வழி டாக்சிகளுக்கான நான்கு ஸ்டாண்டுகளையும் இரண்டு தரையிறங்கும் பகுதிகளையும் கொண்டிருக்கும். இதில் பயணிகள் காத்திருக்கும் இடம் மற்றும் மின்சார சார்ஜிங் நிலையங்கள் இருக்கும். அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நிலையமானது மற்ற போக்குவரத்து முறைகளுடன் தடையின்றி ஒருங்கிணையும் வகையில் அமைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!