அமீரக செய்திகள்

UAE: Bed Space வாடகைக்கு, வேலைக்கு ஆட்கள் தேவை இது போன்ற விளம்பர போஸ்டர்களை ஒட்டினால் கடும் அபராதம்.. அதிரடி நடவடிக்கையை தொடங்கிய எமிரேட்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆங்காங்கே இருக்கக்கூடிய விளக்கு தூண்களிலும், சுவர்களிலும் பெட் ஸ்பேஸ் வாடகைக்கு, வேலைக்கு ஆட்கள் தேவை என்பது போன்ற விளம்பர போஸ்டர்களை ஒட்டுவது வாடிக்கையாகவே நடைபெறக்கூடிய ஒன்றாகும். இந்நிலையில் இதுபோன்ற செயல்களை தடுப்பதற்கும், இவ்வாறான செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஷார்ஜா முனிசிபாலிட்டி அதிரடி பிரச்சாரத்தை தற்போது கையில் எடுத்துள்ளது.

இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஷார்ஜா எமிரேட் முழுவதும் உள்ள கட்டடங்கள், தூண்கள் மற்றும் சுவர்களில் சட்டவிரோதமாக ஒட்டப்பட்டிருக்கும் விளம்பரங்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கைகளைத் ஷார்ஜா முனிசிபாலிடி தொடங்கியுள்ளது. பிரச்சாரத்தின் முதல் கட்டமாக, அல் நஹ்தாவில் Bee’ah Group உடன் இணைந்து முனிசிபாலிடி ஊழியர்கள் போஸ்டர்களை அகற்றும் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, பாலங்கள், தூண்கள், சுரங்கங்கள், மின்விளக்குகள் மற்றும் சுவர்களில் இருந்து பல போஸ்டர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்று மீண்டும் நடக்காமல் தடுக்க போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் எனவும் ஷார்ஜா முனிசிபாலிடி குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.

இது குறித்து ஷார்ஜா முனிசிபாலிட்டியின் டைரக்டர் ஜெனரல் ஓபைத் சயீத் அல் துனைஜி அவர்கள் கூறுகையில், அமீரகம் முழுவதும் இதுபோன்ற சட்டவிரோத ப்ரோமோஷன் போஸ்டர்களை விற்பனை செய்பவர்கள் மற்றும் ஒட்டுபவர்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று முனிசிபாலிட்டி உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், சுவர்களில் நோட்டீஸ்கள் மற்றும் போஸ்டர்களை ஓட்டுபவர்களைப் பிடித்தால் விடுவிக்க மாட்டோம் என்றும் அத்துமீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், போஸ்டர்கள் தொடர்பான சோதனைகள் ஷார்ஜா எமிரேட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் முனிசிபாலிடி அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் என்று ஷார்ஜா முனிசிபாலிடி தெரிவித்துள்ளது. அது போல, இந்த பிரச்சாரத்தின் முன்முயற்சியாக பொது இடங்களை தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்திருக்க விதிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் ஷார்ஜா முனிசிபாலிடி கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!