அமீரக செய்திகள்

UAE: ரமலான் மாதத்தில் மசூதிகளில் பிரார்த்தனை செய்ய புதிய கட்டுப்பாடுகளை விதித்த துபாய்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் சில தினங்களில் புனித ரமலான் நோன்பு தொடங்கவிருப்பதை முன்னிட்டு துபாயில் உள்ள மசூதிகளில் பிரார்த்தனை செய்யும் வழிபாட்டாளர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட கட்டாய முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சக் குழு (Dubai’s Supreme Committee of Crisis and Disaster Management) வெளியிட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி, இரவு நேர தொழுகைக்கான (இஷா) அழைப்பு விடுக்கப்பட்டவுடன் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இஷா தொழுகை நடத்தப்படும் என்றும் அதனை தொடர்ந்து நடைபெறும் தராவீஹ் எனும் ரமலான் மாத சிறப்பு தொழுகை முடிந்ததும் உடனடியாக மசூதிகள் மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் ஆணையம் (The Islamic Affairs and Charitable Activities Department in Dubai – IACAD) கூறும்போது மசூதிகளில் இஷா மற்றும் தாராவீஹ் பிரார்த்தனை செய்ய முடியும் என்றும் வழிபாட்டாளர்கள் முக கவசம் அணிவது மற்றும் உடல் ரீதியான சமூக இடைவெளியை பராமரிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்களை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் மேலும் இந்த இரு பிரார்த்தனைகளும் அதிகபட்சமாக 30 நிமிடங்களில் நடத்தி முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சக் குழுவால் புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் முழு பட்டியல்…

> மசூதியின் கதவுகள் பிரார்தனைக்கான அழைப்பு முதல் தொழுகை முடியும் வரை திறந்திருக்கும்.

> மசூதிகளில் இஷா மற்றும் தாராவீஹ் தொழுகையின் அதிகபட்ச காலம் 30 நிமிடங்களில் முடிக்கப்படும்.

> தொழுகைக்கான அழைப்பு முடிந்து ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு இஷா பிரார்த்தனை நடைபெறும்.

> பிரதான பிரார்த்தனைகள் (இமாமுடன் சேர்ந்து தொழுதல்) முடிந்தபின் இரண்டாவது தொழுகையோ அல்லது தனிப்பட்ட முறையில் தொழுவதோ அனுமதிக்கப்படாது.

> அனைத்து மசூதிகளும் தொழுகைக்குப் பிறகு உடனடியாக மூடப்படும்.

> மசூதியின் நுழைவாயிலில் உணவு அல்லது முக கவசங்கள் போன்ற வேறு எந்த பொருட்களையும் விநியோகிப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

> நாள்பட்ட நோய்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்கள் மசூதிகளில் பிரார்த்தனை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹமத் அல் ஷேக் அகமது அல் ஷைபானி தெரிவிக்கையில், சமூகத்தில் மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் தடுப்பை உறுதி செய்வதற்காக ரமலான் மாதத்தில் அனைத்து மசூதிகளும் நாள் முழுவதும் அடிக்கடி சுத்திகரிப்பு செய்யப்படும் என்று கூறியுள்ளார். மேலும் ரமலானின் கடைசி 10 நாட்களில் நிகழ்த்தப்படும் கியாம்-உல்-லைல் (Qiyam-ul-layl) எனும் நள்ளிரவு தொழுகை நடத்தப்படுவது குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு ஆணையம் நிலைமையை மதிப்பீடு செய்யும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா பரவலை தொடர்ந்து இந்த வருடமும் ரமலான் மாதத்தில் இப்தார் உணவு வழங்கும் கூடாரங்களுக்கு துபாய் அரசு தடை விதித்துள்ளது. எனினும் அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனங்கள் மூலம் இப்தார் உணவு மற்றும் நன்கொடைகள் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!