அமீரக செய்திகள்

துபாயில் பூட்டி இருந்த வீட்டுக்குள் புகுந்த திருடன்… பொருட்கள் ஏதும் இல்லாததால் ஏமாந்ததோடு போலீசாரிடம் பிடிபட்ட அவலம்..!!

துபாயில் பூட்டி இருந்த வீட்டில் திருட நினைத்து புகுந்த திருடன் வீட்டில் விலைமதிப்பான பொருட்கள் ஒன்றும் இல்லாததால் ஏமாந்ததோடு மட்டுமல்லாமல் போலீசாரின் கைகளில் பிடிபட்டுள்ளார். அவருக்கு துபாய் நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனை விதித்ததோடு மட்டுமல்லாமல் நாடு கடத்தவும் உத்தரவிட்டுள்ளது. விரைவாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை மடக்கி பிடித்து துபாய் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

துபாய் பொது வழக்குத்துறை விசாரணையில் வெளிவந்த தகவல்களின்படி, கைதான திருடன் பூட்டப்பட்டுள்ள வீடுகளை குறிவைத்து திருடுபவன் என்பது தெரிய வந்துள்ளது. அதேபோல் அரேபிய பெண் ஒருவரின் வில்லா பூட்டி இருந்ததை தெரிந்து கொண்டு அந்த வீடு புகுந்து பொருட்களை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். அந்த ஏரியாவில் உள்ள அனைவரும் தூங்கிய பின்பு, திருடுவதற்கு பொருட்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

ஆனால், போலீசார் சந்தேகத்திற்கு இடமாக இவர் அங்கு சுற்றி தெரிந்ததை கண்டறிந்து உடனடியாக விசாரித்ததில் உண்மை வெளியாகியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர் தான் திருட முயன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை உணர்ந்த நீதிமன்றம், திருட்டு முயற்சி மற்றும் அத்துமீறல் ஆகிய குற்றச்சாட்டுகளை ஒருங்கிணைத்தது அவரின் மீது வழக்கு பதிவு செய்து தண்டனை விதித்துள்ளது.

இதற்கிடையில், தொலைதூரங்களுக்கு பயணம் செல்ல நேரிட்டால் வீட்டை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விழிப்புணர்வினை துபாய் காவல்துறை மக்களிடம் எடுத்துரைத்துள்ளது. இதன்படி ‘செக்யூயர் யுவர் ஹோம் பிஃபோர் யூ டிராவல் (secure your home before you travel)’ என்ற சேவையின் மூலம் குடியிருப்பாளர்கள் வெளியூர் செல்ல நேரிட்டால் இதில் பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

அவ்வாறு பதிவு செய்யும் பட்சத்தில், அந்த வீடானது காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்த ஒரு பதிவில், “நம்பிக்கையுடன் இருங்கள், உங்கள் வீடுகள் பாதுகாப்பான எங்கள் கைகளில் உள்ளன” என்று காவல்துறை சமீபத்தில் ட்வீட் செய்து மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!