அமீரக செய்திகள்

அபுதாபியில் விதிகளைப் பின்பற்றிய ஓட்டுநர்களுக்கு இலவச பெட்ரோல்.. மீறியவர்களுக்கு ரோஜாப்பூ.. அபுதாபி போலீஸின் வித்தியாசமான முயற்சி..!!

அபுதாபியின் அல் அய்ன் நகரில் போக்குவரத்து விதிகளை சரியாகக் கடைபிடித்த வாகன ஓட்டிகளை அபுதாபி காவல்துறையினர் கௌரவித்துள்ளனர். அவர்களை கௌரவிக்கும் விதமாக, அதிகாரிகள் இலவச எரிபொருள் கார்டுகளை வழங்கியுள்ளனர்.

இந்த முன்முயற்சியின் மூலம், விதிமீறல் இல்லாத போக்குவரத்து நடத்தையை ஊக்குவிப்பதும், சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதுமே முதன்மையான நோக்கமாகக் கூறப்படுகிறது. அபுதாபி காவல்துறையின் ஜெனரல் கமாண்ட் மற்றும் Adnoc விநியோக நிறுவனம் ஆகியவற்றின் கூட்டாண்மையில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் விதிகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களை அங்கீகரிப்பதுடன் அவர்களுக்கு வெகுமதியும் அளிக்கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

அதேசமயம், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதை தவிர்க்குமாறும் வாகன ஓட்டிகளை அல் அய்ன் போக்குவரத்து நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், போக்குவரத்து விதிகளைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து குடியிருப்பாளர்களுக்கு கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, விதிகளை மீறி ஓட்டியவர்களுக்கு ரோஜாக்கள் வழங்குவதுடன் போக்குவரத்து விதி பற்றிய சிறு புத்தகங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தில் போக்குவரத்துச் சட்டங்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், நிஜ வாழ்க்கைக் கதைகள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக அல் அய்ன் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் கர்னல் மட்டர் அப்துல்லா அல்-மஹிரி அவர்கள் பேசுகையில், வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் இந்த அங்கீகாரம் நேர்மறையான போக்குவரத்து நடத்தைக்கான உந்துதலாக செயல்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், இது சாலைப் பாதுகாப்பிற்கும் பங்களிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அபுதாபி காவல்துறை மற்றும் Adnoc நிறுவனத்தின் இந்த புதிய முயற்சிக்கு வாகன ஓட்டிகள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

உடனடி செய்திகளை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!