அமீரக செய்திகள்

74வது பிறந்தநாளைக் கொண்டாடும் துபாய் ஆட்சியாளர்!! – துபாயின் முன்னேற்றத்திற்கு உந்துதலாக இருந்த ஷேக் முகம்மதுவின் வாழ்க்கைப் பயணம்…

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் 74வது பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது. பாலைவனத்தில் எந்த செழிப்பும் இருக்காது என நினைத்திருந்த உலக மக்களுக்கு இங்கு எதை உருவாக்குவதும் சாத்தியம் என்பதையும், தொலைநோக்குப் பார்வையும், திட்டமும், உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதையும் நிரூபித்துக்காட்டியுள்ளார்.

உலகமே திரும்பி பார்க்கும் வண்ணம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி மில்லியன் கணக்கில் உலக மக்கள் ஆவலுடன் வந்து செல்லக்கூடிய நகரமாக துபாய் தற்போது இருப்பதற்கு இவர் ஆற்றிய பங்கு இன்றியமையாதது. இத்தகைய சிறப்புமிக்க பழம்பெரும் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை சற்று புரட்டிப் பார்க்கலாம்.

தொடக்க காலம்: 

ஜூலை 15, 1949 இல் பிறந்த ஷேக் முஹம்மது, துபாய் கிரீக்கில் உள்ள ஷிந்தகாவில் உள்ள அவரது அல் மக்தூம் குடும்பத்தில் வளர்ந்தார். அவரது நான்கு வயதிலேயே வீட்டில் தனிப்பட்ட முறையில் அரபு மற்றும் இஸ்லாமியப் படிப்புகளைப் பயின்றார். அதனையடுத்து ஆல்டர்ஷாட்டில் உள்ள மோன்ஸ் ஆபிசர் கேடட் பள்ளியில் பயிற்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து, விமானியாகப் பயிற்சி பெறுவதற்கு இத்தாலிக்குச் சென்றுள்ளார்.

பதவிகளும் பொறுப்புகளும்:

முதல்முறையாக 1968 ஆம் ஆண்டில், அவரது 19வது வயதில் உலகின் இளமையான பாதுகாப்பு அமைச்சரானார் மற்றும் துபாய் காவல்துறை மற்றும் பொது பாதுகாப்புப் படையின் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம் ஒரு நாடாக உருவான பிறகு 1971 இல் நாட்டின் முதல் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற ஷேக் முஹம்மது, எண்ணெய் கண்டுபிடிப்பதற்கு முன்பே துபாயை ஒரு வணிக மற்றும் வர்த்தக மையமாக நிறுவிய தனது தந்தையின் வணிக வளர்ச்சிக்கு முன் வரிசையில் இருந்து பணியாற்றியிருக்கிறார்.

இதற்கிடையில், அக்டோபர் 1990 இல் அவரது தந்தை ஷேக் ரஷீத் அவர்கள் இறந்த பிறகு, 1995 இல் பட்டத்து இளவரசராக ஷேக் முஹம்மது நியமிக்கப்பட்டார். அத்துடன் விமான நிலையம் மற்றும் எண்ணெய் தொழில்துறைக்கு பொறுப்பேற்ற ஷேக் முஹம்மது, போர்ட் ரஷீத் மற்றும் ஜெபல் அலியை இணைத்து துபாய் போர்ட்ஸ் அத்தாரிட்டியை (Dubai Ports Authority) உருவாக்கினார், தற்போது DP வேர்ல்ட், உலகின் மிக வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

தொலைநோக்குப் பார்வையினால் படைத்த சாதனைகள்:

எதிர்காலத்தில், இணையம் உலகை ஆளும் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருந்த அவர், 1999 இல் அனைத்து அரசாங்க சேவைகளையும் ஆன்லைனில் மாற்ற உத்தரவிட்டார். அதன்பிறகு, 2006 ஆம் ஆண்டு துபாயின் ஆட்சியாளராக பதவியேற்ற ஷேக் முஹம்மதுவின் ஆட்சியில், துபாய் அதிவேகமான வளர்ச்சியைச் சந்தித்தது. அதாவது உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா, 2009 இல் கட்டி முடிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து துபாய் மால் மற்றும் துபாய் மெட்ரோ ஆகியவை விரைவில் கட்டப்பட்டன.

அதுமட்டுமின்றி, முஹம்மது பின் ரஷீத் விண்வெளி மையம், நாட்டின் முதல் விண்வெளி வீரரை விண்வெளிக்கு அனுப்பியது. இவ்வாறு ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் மூலம், துபாயை முன்னோக்கிய வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுள்ளார்.

இத்தனை பெருமைகளுக்கும் உரித்தான உன்னதத் தலைவரின் அர்ப்பணிப்பையும் எண்ணற்ற சாதனைகளையும் நினைவு கூரும் இந்த நன்னாள் உலகிற்கு மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கட்டும், விதிவிலக்கான தலைவர் ஷேக் முஹம்மது அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

Related Articles

Back to top button
error: Content is protected !!