அமீரக செய்திகள்

துபாய்: தினமும் லேபர் பஸ்ஸில் செல்லும் தொழிலாளர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸில் ஆடம்பர சுற்றுப்பயணம்..!! மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விட்ட தொழிலாளர்கள்..!!

ஐக்கிய அரபு அமீரகம் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது வானளாவிய கட்டிடங்களும் நகரின் அழகியல் தோற்றமும்தான். இதனை உருவாக்குவதற்கான கனவு திட்டத்தை எவர் கொண்டு வந்தாலும் அந்த கனவை நனவாக்குவதற்கு மிக முக்கியமாக தேவைப்படுவது தொழிலாளர்கள்தான். அவர்கள் இல்லையெனில் இத்தகைய வளர்ச்சியை அமீரகம் கண்டிருக்காது.

இத்தகைய வானுயர்ந்த ஹோட்டல்கள், லக்ஸரி அப்பார்ட்மெண்ட்ஸ் உள்ளிட்ட பல கட்டிடங்களை கட்டி முடித்த தொழிலாளர்களுக்கு அவை இயங்க ஆரம்பித்த பின்னர் அதற்குள் செல்ல முடியுமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.

இது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்ற போதிலும் குறைந்த சம்பளத்திற்கு பணிபுரிந்து வரும் ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கு அமீரகத்தில் ஆடம்பர வாழ்க்கை என்பது கனவாகவே இருக்கும். ஆனால் தொழிலாளர்களின் இந்த உழைப்புக்கு பாராட்டும் விதமாக அவர்கள் கனவிலும் நினைக்காத ஒரு அனுபவத்தை அளித்திருக்கின்றது துபாயை சேர்ந்த ஒரு நிறுவனம்.

ஒவ்வொரு நாளும் தங்கள் தொழிலாளர் பேருந்தில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களில் எட்டு ப்ளூ காலர் தொழிலாளர்களுக்கு, அவர்கள் கனவிலும் நினைக்காத ஒரு அனுபவமாக ரோல்ஸ் ராய்ஸில் அவர்கள் உருவாக்க உதவிய துபாய் நகரத்தைச் சுற்றிய ஒரு பயணத்தை நிறுவனம் வழங்கியுள்ளது.

துபாயை தளமாகக் கொண்ட வேர்ல்ட் ஸ்டார் ஹோல்டிங், மே 1 அன்று கொண்டாடப்பட்ட உலக தொழிலாளர் தினத்தையொட்டி, அதன் தொழிலாளர்களுக்கு இந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்த நிறுவனம் ஒரு சில பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து, ஆடம்பர வாகனமான ரோல்ஸ் ராய்ஸில் துபாயை சுற்றி காட்டியுள்ளது.

நிறுவனத்தில் பணியாற்றி வரும் 7,000 ஊழியர்களில் எட்டு பேர், சிறந்த சேவைகளுக்காக ‘சிறந்த பணியாளர்’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு நாட்கள் சொகுசு வாழ்க்கையை அனுபவித்துள்ளனர்.

அவர்கள் உலகின் மிகப்பெரிய ஹோட்டல்களில் ஒன்றான புர்ஜ் அல் அரப், உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா போன்ற இடத்திற்கு சென்று சுற்றிப்பார்த்துள்ளனர்.

பங்களாதேஷை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களான முகமது மின்டோ மற்றும் அப்துல் பஷார் ஆகியோர், புர்ஜ் கலீஃபாவின் 124வது மாடியில் இருந்து துபாயின் பரந்த காட்சியை ரசிப்பது ஒரு கனவு நனவானதாக தெரிவித்துள்ளனர். இவர்கள் புர்ஜ் கலீஃபாவின் கட்டுமானத்தின்போது பணிபுரிந்தவர்கள் ஆவர்.

தமிழகத்தைச் சேர்ந்த குப்புசுவாமி என்பவர், எப்போதும் தூரத்தில் இருந்து பார்க்கும் புர்ஜ் அல் அரபின் உட்புறம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். அவர் தனது பேருந்தில் தினந்தோறும் வேலை செய்வதற்கான கட்டுமானப் பகுதிகளுக்குச் செல்லும் போது கம்பீரமான இந்த புர்ஜ் அல் அரப் கட்டிடத்தை எப்போதும் பிரமிப்புடன் பார்ப்பேன் என்று கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த இம்ரான் கான், தனது தொழிலாளர் பேருந்திற்குப் பதிலாக துபாய் சாலைகளில் ரோல்ஸ் ராய்ஸ் காரில் சென்றது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அசோக் குமார் மற்றும் ராம்பிலாஷ் சவுகான் ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் அனுபவிக்க முடியாது என்று நினைத்த இந்த தருணங்கள் உண்மையில் நடந்ததை எண்ணி மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.


இது பற்றி வேர்ல்ட் ஸ்டார் ஹோல்டிங்கின் தலைவர் நிஷாத் ஹுசைன் கூறுகையில், “இன்று நாம் அனுபவிக்கும் நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பும் இந்த தொழிலாளர்கள் சிந்திய வியர்வைக்கு கிடைத்த வெகுமதியாகும். இதற்காக அவர்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை. அவர்களுக்கு எங்கள் நன்றியைக் காட்ட இது ஒரு பணிவான வழியாகும். இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக ஒரு பெரிய ஆச்சரியத்தை தயார் செய்தோம்” என்று கூறினார்.

ஏற்கெனவே தொழிலாளர் பேருந்துகளுக்குள் இலவச வைஃபை மற்றும் தொலைக்காட்சிகளை நிறுவுதல் போன்ற செயல்களால் வேர்ல்ட் ஸ்டார் நிறுவனம் பலரை ஆச்சரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் தொழிலாளர்களின் நலனுக்காக இன்னும் பல திட்டங்களை இந்நிறுவனம் வைத்துள்ளது.

துபாய் மால், புர்ஜ் கலீஃபா, துபாய் மெட்ரோ, துபாய் பிரேம், ஃபியூச்சர் மியூசியம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளில் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது, ​​எதிஹாட் ரயிலுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உழைத்து வருகின்றனர்.

அவர்களின் கடின உழைப்பை அங்கீகரிக்கும் இத்தகைய முயற்சிகள் ஊழியர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுவதாக நிர்வாக இயக்குனர் ஹசீனா நிஷாத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!