அமீரக செய்திகள்

துபாயை மெருகேற்ற வரும் பாம் ஜெபல் அலி ஐலேண்ட்..!! பாம் ஜுமேராவை விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும் என தகவல்…!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், புதிய பாம் ஜெபல் அலி திட்டத்தை அறிவித்துள்ளார். இது துபாயின் அடையாளமான பாம் ஜுமேராவை விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், அவரது ட்விட்டர் பக்கத்தில், துபாயை உலகின் மிக அழகான நகரமாக மாற்றுவதற்கான லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய இலக்கு எவ்வாறு வருகிறது என்பதை ட்வீட் செய்துள்ளார்.

துபாய் ஆட்சியாளர் இத்திட்டம் குறித்து விவரிக்கையில், பாம் ஜெபல் அலி, 110 கிமீ நீளமுள்ள கடற்கரைகளைக் கொண்டிருக்கும் என்றும், அதன் பசுமையான நிலங்கள் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்துடன் கூடிய வீடுகளைக் கொண்டிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த புதிய தீவில் 80 க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள் உருவாக்கப்படும் என்பதால், இது உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்துக் கூறுகையில், @2033 ஆம் ஆண்டிற்குள் துபாயின் பொருளாதாரத்தை இரட்டிப்பாக்குவதற்கான இலக்கை நாங்கள் அறிவித்துள்ளோம். மேலும் ஒவ்வொரு நாளும் உலகின் மிக அழகான நகரத்தை உருவாக்குவதில் ஒரு புதிய செங்கல் சேர்க்கிறோம்” என்று அல் மக்தூம் தெரிவித்துள்ளார்.

இதே போல் பாம் ஜூமேரா போன்றே பாம் தேரா மற்றும் பாம் ஜபெல் அலி ஆகிய திட்டங்கள் ஏற்கெனவே துவங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. அதில் பாம் ஜூமேரா மட்டுமே திட்டம் துவங்கியதில் இருந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவிலேயே முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!