அமீரக செய்திகள்

DXB-ல் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 21.2 மில்லியனைத் தாண்டிய பயணிகள் போக்குவரத்து!! – முதலிடம் பிடித்த இந்தியா..

உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையம் தற்போது (DXB) தொற்றுநோய்க்கு முந்தைய போக்குவரத்து விகிதத்தை மீண்டும் எட்டியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி முதல் ஏப்ரல் வரை) மட்டும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 21.2 மில்லியனைத் தாண்டியுள்ளதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு 66 மில்லியன் பயணிகளைப் பதிவு செய்ததன் மூலம், உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையம் என்பதை தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக துபாய் சர்வதேச விமான நிலையம் தக்கவைத்துக் கொண்டது. தற்பொது இந்தாண்டின் முதல் காலாண்டை கடந்த 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, ​​பயணிகளின் போக்குவரத்து 55.8 சதவிகிதம் அதிகரித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், 2019 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிலிருந்து சராசரி மாதாந்திர போக்குவரத்து 7 மில்லியன் பயணிகளின் எண்ணிக்கையை எட்டியது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது. அதன்படி முதல் காலாண்டில் கிட்டத்தட்ட 7.3 மில்லியன் பயணிகளுடன் மிகவும் பரபரப்பான மாதமாக மார்ச் மாதம் இருந்துள்ளது.

முதலிடம் பிடித்த இந்தியா:

துபாய் விமான நிலையத்திற்கு பயணம் செய்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 3 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து 1.6 மில்லியன் பயணிகளுடன் சவுதி அரேபியா இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து (1.4 மில்லியன்), பாகிஸ்தான் (1 மில்லியன்), அமெரிக்கா (840,000), ரஷ்யா (729,000) மற்றும் ஜெர்மனி (628,000) ஆகியவை அடுத்தடுத்த இடத்திலும் உள்ளது.

அதுபோல, குறிப்பிட்ட நகரத்திலிருந்து துபாய்க்கு பயணித்த பயணிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், சிறந்த நகரங்களின் பட்டியலில் லண்டன் (890,000), மும்பை (645,000), ஜெத்தா (641,000) மற்றும் ரியாத் (604,000) ஆகிய நகரங்கள் முன்னிலையில் உள்ளன.

இயக்கப்பட்ட விமானங்கள்:

அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்தாண்டின் முதல் காலாண்டில் 100,840 விமானங்களை துபாய் விமான நிலையம் இயக்கியுள்ளது, மேலும் இந்த எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டை விட 1.6 சதவிகிதம் அதிகம் என்றும், மற்றும் இந்த சதவிகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக பெயரெடுத்துள்ள துபாய் சர்வதேச விமான நிலையமானது, 89 திட்டமிடப்பட்ட சர்வதேச விமான நிறுவனங்கள் வழியாக 99 நாடுகளில் உள்ள 234 இடங்களுடன்  இணைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!