அமீரக செய்திகள்

துபாய் மெட்ரோ விரிவாக்கம்: புதிதாக அமைக்கப்படும் ப்ளூ லைன் பாதை.. 14 மெட்ரோ ஸ்டேஷன்கள் இருக்கும் எனத் தகவல்…

துபாய்வாசிகளின் முக்கிய மற்றும் பிடித்தமான போக்குவரத்தான துபாய் மெட்ரோவில் ரெட் லைன் மற்றும் கிரீன் லைன் என இரண்டு வழித்தடங்கள் செயலில் இருந்து வருகின்றது. இந்நிலையில் மெட்ரோவில் புதிதாக 30-கிலோமீட்டர் நீளமுள்ள புளூ லைன் பாதை சேர்க்கப்படும் என்று தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் மெட்ரோவானது இதுவரை 2 பில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்து முதன்மையான பொதுப் போக்குவரத்து சேவையாக உள்ளது. இது முதன்முதலில் செப்டம்பர் 9, 2009 இல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 89.3 கிமீ நீளம் கொண்ட உலகின் மிக நீளமான ஓட்டுநர் இல்லாத மெட்ரோ நெட்வொர்க்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் கிரீன் லைனில் தற்போது 53 நிலையங்கள் மற்றும் 129 ரயில்கள் உள்ளன. இது நேரத்தை கடைபிடிக்கும் விகிதத்தில் 99.7 சதவீதத்தை பராமரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய பாதையானது, தற்போதுள்ள ரெட் மற்றும் கிரீன் மெட்ரோ பாதைகளுக்கு இடையே ஒரு இணைப்பை வழங்கும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது. புதிய மெட்ரோ பாதை 15.5 கி.மீ தொலைவிற்கு நிலத்தடியிலும், 14.5 கி.மீ. தரைக்கு மேலே உயரத்திலும் அமைக்கப்படும் என்றும், இதில் 14 மெட்ரோ நிலையங்கள் இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு ஐகானிக் ஸ்டேஷன், ஏழு உயரமான ஸ்டேஷன்கள், ஒரு இன்டர்சேஞ்ச் ஸ்டேஷன் உட்பட ஐந்து தரைக்குக் கீழே உள்ள ஸ்டேஷன்கள் என மொத்தம் 14 மெட்ரோ நிலையங்கள் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓட்டுநர் இல்லாத ரயில்கள்:

மெட்ரோ ப்ளூ லைனுக்கான பாதை, செலவு மற்றும் திட்டத்திற்கான காலக்கெடு போன்ற விவரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் 28 புதிய ஓட்டுநர் இல்லாத ரயில்களை வழங்குதல், அத்துடன் 60 ரயில்கள் வரை செயல்பட ஒரு புதிய டிப்போவை நிர்மாணித்தல் மற்றும் தொடர்புடைய அனைத்தையும் கட்டுதல் ஆகியவை குறித்து சாத்தியமான ஒப்பந்ததாரர்களின் டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ப்ளூ லைன் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வெற்றிகரமாகப் பெறும் ஒப்பந்ததார நிறுவனம் பின்வரும் நடவடிக்கைகளில் வேலை செய்யும் என்று கூறப்படுகிறது:

  • கட்டடக்கலை மற்றும் கட்டமைப்பு கூறுகளின் விரிவான வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் உட்பட சிவில் பணிகள் (மேம்பாலம், சுரங்கங்கள், நிலையங்கள் போன்றவை).
  • எலக்ட்ரோ மெக்கானிக்கல் வேலைகளின் வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல்.
  • ரயில், நிலையங்கள் மற்றும் வசதிகளுக்கான செயல்பாடு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளின் வடிவமைப்பு, கொள்முதல் மற்றும் விநியோகம்.
  • ரயில் பாதையில் பயன்படுத்தப்படும் பாகங்களின் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் வழங்கல் (ரயில் சக்கரங்களில் உள்ள எதையும் குறிக்க இரயில்வே துறையில் பயன்படுத்தப்படும் பொதுவான சொல்)

இந்த புதிய ப்ளூ லைன் மெட்ரோ விரிவாக்கமானது துபாய் 2040 நகர்ப்புற திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ளது. அதாவது, 2040 ஆம் ஆண்டில் துபாயின் மக்கள்தொகை 5.8 மில்லியனை எட்டும் என்ற எதிர்பார்ப்பில் இத்திட்டம் மார்ச் 2021 இல் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!