அமீரக செய்திகள்

பூனையைக் காப்பாற்றியவர்களுக்கு ரூ. 40 இலட்சம் வழங்கிய துபாய் ஆட்சியாளர்..!!

துபாயில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டடத்தின் இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து கர்ப்பிணிப் பூனை ஒன்று கீழே விழ நேரும் போது தக்க சமயத்தில் சமயோஜிதமாக செயல்பட்டு பூனையினைக் காப்பாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த வீடியோவினை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களே தனது ட்விட்டர் பக்கத்தில் ஹீரோக்கள் எனக் குறிப்பிட்டு பகிர்ந்தார்.

இதனையடுத்து வீடியோ மூலம் வைரலான நான்கு துபாய் குடியிருப்பாளர்களும், துபாய் ஆட்சியாளரிடமிருந்து பணப் பரிசைப் பெற்றுள்ளனர்.

நான்கு பேரும் பூனையின் உயிரைக் காப்பாற்றிய தங்களின் விரைவான சிந்தனைக்காக தலா 50,000 திர்ஹம் (இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபாய்) பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நான்கு நபர்களுக்கும் மொத்தமாக இரண்டு இலட்சம் திர்ஹம்ஸ் (இந்திய மதிப்பில் 40 இலட்சம் ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது.

துபாய் ஆட்சியாளர் அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி பூனையைக் காப்பாற்றிய மொராக்கோ வாட்ச்மேன் அஷ்ரப், அதிஃப் மெஹ்மூத் எனும் ஒரு பாகிஸ்தான் விற்பனையாளர், சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தில் (RTA) பணிபுரியும் இந்திய ஓட்டுநர் நாசர் மற்றும் அந்த வீடியோவை எடுத்த முகமது ரஷீத்  ஆகியோரைப் பார்வையிட்டு பணம் அடங்கிய ஒரு உறை கொடுத்துள்ளார்.

பல்வேறு பின்னணியைச் சேர்ந்த இந்த மூன்று பேரும் சம்பவத்திற்கு முன்பு ஒருவருக்கொருவர் தெரியாது என்று கூறியிருக்கின்றனர். பூனையைக் காப்பாற்றவே நாங்கள் அனைவரும் ஒன்றாக வந்தோம் என்று ஆதிஃப் கூறினார்.

வீடியோவில், பூனை பால்கனியில் இருந்து தொங்குவது போல் காணப்படுகிறது. மூன்று பேர் கொண்ட ஒரு குழு விரைவாக ஒரு பெட்ஷீட்டை ஒரு பாதுகாப்பு வலையாக விரித்து கீழே விழும் பூனையைக் காப்பாற்றுகின்றனர்.

இந்த வீடியோவைப் பகிர்ந்த ஷேக் முகம்மது அவர்கள் அவர்களை அடையாளம் காணக்கூடிய மக்கள் தனது சார்பாக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!