அமீரக செய்திகள்

துபாயில் இயங்கும் தனியார் பள்ளிகளில் கட்டணம் இரட்டிப்பாக உயர வாய்ப்பு.. கட்டணத்தை உயர்த்த KHDA அனுமதித்ததன் எதிரொலி..!!

துபாயில் உள்ள தனியார் பள்ளிகள் சமீபத்திய வருடாந்திர ஆய்வுகளில் பெற்றுள்ள தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்து, தங்கள் பள்ளிகளை நிர்வகிப்பதற்கான கட்டணத்தை (Education Cost Index – ECI) 5.2 சதவீதம் வரை அதிகரிக்க அனுமதியளிக்கப்படும் என்று அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) அறிவித்துள்ளது.

KHDA வின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, துபாயில் இயங்கும் தனியார் பள்ளிகள் 2024-25 கல்வியாண்டுக்கான கட்டணத்தில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த ஆய்வு மதிப்பீட்டில் வீழ்ச்சியடைந்த பள்ளிகள் எந்தவொரு கட்டண உயர்விற்கும் விண்ணப்பிக்கத் தகுதிபெறாது எனவும் கூறப்பட்டுள்ளது.

KHDAயின் படி, பள்ளிகள் தங்கள் கட்டணத்தை அதிகரிக்கும் விகிதம் ஒவ்வொரு நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வு மதிப்பீட்டை பொருத்தே அமையும். குறிப்பாக, பள்ளிகளின் எந்தவொரு கட்டண மாற்றமும் KHDA ஆல் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.

பள்ளிகள் பெறும் மதிப்பீடும் அனுமதிக்கப்படும் கட்டண உயர்வு விகிதமும்:

  • ‘Weak’ என்பதிலிருந்து ‘Acceptable’ அல்லது ‘Acceptable’ முதல் ‘Good’ என்று தங்கள் மதிப்பீட்டை மேம்படுத்தும் பள்ளிகள் ECI கட்டணத்தை 2.6 லிருந்து 5.2 சதவீதம் வரை உயர்த்தலாம்.
  • அதேபோல், ‘Good’ என்பதிலிருந்து ‘Very Good’ என்ற நிலைக்கு உயரும் பள்ளிகள் 4.55 சதவீதம் வரை ECI கட்டணத்தை அதிகரிக்கலாம்.
  • தங்கள் மதிப்பீட்டை ‘Very Good’ என்பதில் இருந்து ‘Outstanding’ என மேம்படுத்திக் கொள்ளும் பள்ளிகள் தங்கள் ECI கட்டணத்தை 3.9 சதவீதம் வரை உயர்த்தலாம்.
  • கடந்த ஆண்டின் ஆய்வு மதிப்பீட்டில் மாற்றம் இல்லாத பள்ளிகளில் ECI கட்டணம் 2.6 சதவீதம் வரை உயர்த்த அனுமதிக்கப்படும்.

ECI என்பது, துபாயில் உள்ள தனியார் பள்ளிகளின் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். அதாவது ஒரு பள்ளியை நடத்துவதற்கான செயல்பாட்டு செலவை இது கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் இது டிஜிட்டல் துபாய் ஆணையத்துடன் (Digital Dubai Authority) இணைந்து KHDA ஆல் கணக்கிடப்படுகிறது.

கட்டண உயர்வு குறித்து KHDA இன் பெர்மிட் இயக்குனர் ஷம்மா அல்மன்சூரி (Shamma AlMansouri) என்பவர் கூறுகையில், பள்ளிகளின் ஆய்வு மதிப்பீடுகளுடன் கட்டண சரிசெய்தலை சீரமைப்பது, பள்ளிகள் வழங்கும் தரத்தை வலியுறுத்தும் அதே நேரத்தில், துறையின் போட்டித்தன்மையையும் மேம்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

துபாயை பொருத்தவரை, கடந்த 2023-24 கல்வியாண்டில் இருந்து தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரிப்பை கண்டுள்ளது. மேலும், துபாய் முழுவதும் வெவ்வேறு நாடுகளின் 17 வெவ்வேறு பாடத்திட்டங்களை வழங்கும் 220 தனியார் பள்ளிகளில் 365,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!