அமீரக செய்திகள்

வானில் தோன்றும் சுஹைல் நட்சத்திரம்!! அமீரகத்தில் கோடைகால வெப்பம் முடிவுக்கு வருவதைக் குறிக்கிறதா..??

ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைக்காலத்தை முன்னிட்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இந்த கோடைகாலம் முடிவுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுஹைல் நட்சத்திரம் அரேபிய தீபகற்பத்தின் (Arabian Peninsula) தென்கிழக்கு வானத்தில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி விடியற்காலையில் காட்சியளிக்கும் என்று அமீரக வானியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த வானியல் நிகழ்வு பாரம்பரியமாக தீவிரமான கோடை வெப்பத்தின் முடிவையும், குளிர்ச்சியான காலநிலையின் தொடக்கத்தையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அமீரகத்தின் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் இனி வரும் நாட்களில் குளிர்ச்சியான வானிலையை அனுபவிக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கெனவே கடந்த சில தினங்களாக அமீரகத்தில் கன மழையுடன் அதிவேக காற்றும் வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான அரபு யூனியனின் (Arab Union for Astronomy and Space Sciences) உறுப்பினரான இப்ராஹிம் அல் ஜார்வான் என்பவர், வானில் சுஹைல் நட்சத்திரம் (Canopus) தோன்றுவது நாட்டில் நிலவும் கடுமையான வெப்பநிலை தணிந்து, மிதமான வானிலையை நோக்கி நாட்கள் நகரும் என்பதை உறுதியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், லிவா (Liwa) போன்ற தென்திசைப் பகுதிகளில் ஆகஸ்ட் 20 க்கு முன்பும், ராஸ் அல் கைமா போன்ற வடக்குப் பகுதிகளில் ஆகஸ்ட் 25 க்கு முன்பும் இந்த நட்சத்திரத்தைக் காண்பதற்கு வாய்ப்பில்லை என்று அல் ஜார்வான் விளக்கியுள்ளார்.

சுஹைல் நட்சத்திரத்தின் எழுச்சி நாட்டில் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, ஆனால் அது உடனடியாக வானிலை மாற்றத்தை ஏற்படுத்தாது. அதாவது, இது ஒரு வானியல் நிகழ்வு மற்றும் நேரடியாக வானிலை நிலைமைகளை உடனடியாக மிதப்படுத்துவதில்லை என்றும் கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!