வளைகுடா செய்திகள்

வெளிநாட்டவர்கள் குவைத் வர புதிய கட்டுப்பாடு! – ‘KUWAIT VISA’ ஆப் அறிமுகம்.. அறிவிப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகம்..!!

குவைத் நாட்டிற்குள் வெளிநாட்டவர்கள் நுழைவதை ஒழுங்குபடுத்தவும் மற்றும் விசா செயல்முறையை கட்டுப்படுத்தவும், ‘KUWAIT VISA’ எனும் புதிய மொபைல் ஆப்பை கடந்த வியாழக்கிழமை அன்று குவைத் உள்துறை அமைச்சகம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியானது பாதுகாப்பாக ஊழியர்கள் நாட்டிற்குள் நுழையவும், உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் நுழைவு விசாக்களை மோசடி செய்வதை எதிர்த்துப் போராடவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

குவைத்தின் துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சரும் மற்றும் பாதுகாப்புத்துறை துறை அமைச்சருமான மாண்புமிகு ஷேக் தலால் காலீத் அல் அஹம்மது அல் சபா (Sheikh Talal Khaled Al-Ahmad Al-Sabah) அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய செயலியானது, விமானத்தில் ஏறுவதற்கு முன், தொழிலாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நுழைவு அம்சங்களை சரிபார்க்கவும், நுழைவு விசாக்களை மின்னணு முறையில் விரைவாகவும், துல்லியமாகவும் அங்கீகரிக்க பயன்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்துவதன் நோக்கம், குற்றப் பதிவுகள் உள்ளவர்கள், நீதிமன்றங்களால் தேடப்படுபவர்கள் அல்லது தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்துவதும், சமூக உறுப்பினர்களை பாதுகாக்கப்பதாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த செயலியை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு வெளியுறவு அமைச்சகம், பல்வேறு விமான நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள குவைத் தூதரகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், இந்த செயலியானது ஒரு முறை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டால், இந்த செயலி மூலம் மட்டுமே பார்வையாளர்கள் குவைத் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், விண்ணப்பிக்காத வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் குவைத்துக்குள் நுழைய முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. குவைத் நாட்டவர்களை பதிவு செய்யாத தொழிலாளர்களிடமிருந்து பாதுகாப்பதே இந்த ஸ்மார்ட் செயலியின் முக்கிய நோக்கம் என்றும் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள குவைத் விசா சோதனை முறை செயலியை, விமான நிறுவனங்கள், வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் குவைத் தூதரகங்களில் உள்ள ஊழியர்கள், வெளிநாட்டு ஊழியர்களின் விண்ணப்ப அம்சங்களின் செல்லுபடியை உறுதிசெய்ய இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குவைத்தில் மக்கள்தொகையை ஒழுங்குபடுத்துவதையும், தொழிலாளர் சந்தையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நுழைவு நடைமுறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு எடுத்துரைக்க, மாநிலத்தின் பல்வேறு அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து, வெளிநாட்டவர்களுக்கான சேவைகளின் தொகுப்பைச் சேர்ப்பதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!