அமீரக செய்திகள்

UAE: ரெட் சிக்னலை கடந்தால் 50,000 திர்ஹம்ஸ்.. பாதசாரிகளுக்கு வழிவிடாமல் சென்றால் 5,000 திர்ஹம்ஸ்.. நடைமுறைக்கு வந்த புதிய அபராத பட்டியல்..!!

அபுதாபியில் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் வாகன சிறை பிடிப்பு தொடர்பாக அப்டேட் செய்யப்பட்டுள்ள புதிய போக்குவரத்து சட்டம் நேற்று (செப்டம்பர் 9) புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

புதிய போக்குவரத்து சட்டத்தின்படி, போலீஸ் வாகனத்துடன் மோதியது, சட்டவிரோத சாலை பந்தயங்களில் ஈடுபடுவது மற்றும் செல்லுபடியாகும் வாகன பதிவு எண் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களுக்கு விதி மீறல்களில் ஈடுபட்ட வாகனகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அடைத்து வைக்கப்படும் எனவும், புதிய சட்டத்தின்படி, வாகன விதி மீறல்களுக்கு அதிகபட்சமாக 50,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அபுதாபி காவல்துறை அறிவித்துள்ளது.

மேலும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை முன் பக்க சீட்டில் உட்கார அனுமதிப்பது, அதிக வேகம், டெயில்கேட்டிங் போன்றவற்றால் ஏற்படும் விபத்து மற்றும் பாதசாரிகளுக்கு முன்னுரிமை கொடுக்கத் தவறியது போன்ற குற்றங்களுக்காகவும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படலாம் எனவும், இந்த மீறல்களுக்கு 5,000 திர்ஹம்ஸ் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தவிர புதிய போக்குவரத்துச் சட்டத்தின் கீழ், போக்குவரத்து அபராதங்களில் 7,000 திர்ஹம்ஸிற்கு அதிகமான தொகையை கொண்டிருந்தாலும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபுதாபி காவல்துறை விரிவான ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் இந்த புதிய முடிவை வெளியிட்டிருப்பதாகவும், ஓட்டுநர்கள் மத்தியில் பொறுப்பற்ற நடத்தைக்கு தீர்வு காண்பது மற்றும் அனைவருக்கும் சாலைகள் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு தற்போது நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளதாகவும் மத்திய செயல்பாட்டுத் துறை இயக்குனர் பிரிக் சுஹைல் சயீத் அல் கைலி இன்று (செப்டம்பர் 10) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகும் உரிமை கோரப்படாமல் இருந்தால் ஏலம் நடத்தப்படும் என்றும், அதில் வாகனத்தின் மதிப்பு அபராத தொகையை விட குறைவாக இருந்தால், மீதமுள்ள தொகையை குற்றவாளியின் போக்குவரத்து அபராத கோப்பில் சேர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “அபுதாபியில் வாகனங்கள் பறிமுதல் செய்வது தொடர்பான இந்த புதிய முடிவு ஒரு கூட்டாட்சி முடிவு அல்ல, இது அபுதாபிக்கு மட்டுமே பொருந்தும்” என்றும் பிரிக் அல் கைலி தெளிவுபடுத்தியுள்ளார்.

புதிய போக்குவரத்து சட்டத்தின்படி, பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது மற்றும் சிக்னலில் சிவப்பு விளக்கை கடப்பது ஆகியவை வாகனங்களை சிறையில் அடைக்கக்கூடிய பிற விதி மீறல்கள் எனவும் அபுதாபி காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு விதி மீறல்களுக்கும் அபராதமாக 50,000 திர்ஹம்ஸ் விதிக்கப்படும் என்பதும், மேலும் ஓட்டுநர் உரிமம் ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனுடன் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் சிறைபிடிப்பு காலத்தின் முடிவில் அனைத்து அபராதங்களும் தீர்க்கப்பட்ட பின்னரே கைப்பற்றப்பட்ட வாகனங்களை விடுவிக்க முடியும் எனவும் புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!