அமீரக செய்திகள்

அமீரக குடியிருப்பாளர்கள் தங்களின் விசா நிலையை விசா முடிவதற்கு முன்பே திருத்திக் கொள்ள வழிமுறைகள் என்ன.? கட்டணம், நிபந்தனை உள்ளிட்ட முழு விபரமும் இங்கே..!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டியானது (ICP), இப்போது இணையதளம் மற்றும் ஸ்மார்ட் அப்ளிகேஷனில் உள்ள ஸ்மார்ட் சேனல்கள் மூலம் ஸ்பான்சர் செய்யப்பட்ட நபரின் விசாவின் நிலையைத் திருத்திக் கொள்ள வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது.

அவ்வாறு ஸ்பான்சர் செய்யப்பட்ட நபரின் விசாவை திருத்த சில நிபந்தனைகள் இருப்பதாகவும் ICP விவரித்துள்ளது. அதன் படி, ஸ்பான்சர் செய்யப்பட்ட நபர் நாட்டில் இருக்க வேண்டும் மற்றும் திருத்தப்படும் விசா செல்லுபடியானதாக இருக்க வேண்டும் என்றும் ICP குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் தங்களின் விசா நிலையை திருத்த தேவையுடையவர்கள் விசா முடிவதற்கு முன்பே அதனை திருத்திக்கொள்ள முடியும் எனபது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சேவையை பெறுவதற்கு, விசா தரவை திருத்துவதற்கான அல்லது ரத்து செய்வதற்கான கோரிக்கை எதுவும் ஏற்கனவே செயலாக்கத்தில் இல்லை என்பதையும், ஸ்பான்சர்ஷிப் கோப்பின் நிலை ஆக்டிவ் ஆக இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் ICP அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் இந்த சேவையை, https://www.icp.gov.ae/ அல்லது “UAEICP” ஸ்மார்ட் அப்ளிகேஷன் வாயிலாக UAEPASS அல்லது பயனர் பெயர் மூலம் வாடிக்கையாளர்கள் பல வழிகளில் விண்ணப்பிக்க கோரலாம் என்றும் அடையாளம் மற்றும் குடியுரிமை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமட்டுமின்றி, எமிரேட்டில் உள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் அல்லது ICP ஆல் அங்கீகரிக்கப்பட்ட டைப்பிங் அலுவலகங்களுக்குச் சென்றும் வாடிக்கையாளர்கள் இந்த விசா திருத்த சேவைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ICP தெரிவித்துள்ளது.

செலவு:

ICP ன் இந்த சேவையை பெற விண்ணப்பித்தல் கட்டணம் 500 திர்ஹம் என்றும், ஸ்மார்ட் சேவைகள் கட்டணமாக 100 திர்ஹம் மற்றும் இ-சேவைகள் மற்றும் ICP கட்டணமாக 50 திர்ஹம் என மொத்தம் 650 திர்ஹம் செலவாகும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

ஒருவேளை, விண்ணப்பத்தில் போதுமான தரவு அல்லது தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்யத் தவறியிருந்தால், வாடிக்கையாளர்களின் விண்ணப்பம் 30 நாட்களுக்குப் பிறகு மின்னணு முறையில் நிராகரிக்கப்படும் என ICP குறிப்பிட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பம் நிராகரிக்கப்படும் போது, வழங்கல் கட்டணங்கள் மற்றும் நிதி உத்தரவாதங்கள் போன்ற ஏதேனும் இருந்தால் மட்டுமே அந்த பணம் திரும்பச் செலுத்தப்படும் என்றும் ICP தெளிவுபடுத்தியுள்ளது.

அந்த வகையில், விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு மிகாமல் உள்ள காலக்கட்டத்தில் கிரெடிட் கார்டு, காசோலை அல்லது வங்கிப் பரிமாற்றம் மூலம் நாட்டிற்குள் அமைந்துள்ள வங்கிகளில் மட்டுமே அந்த கட்டணம் வாடிக்கையாளர்களுக்கு திருப்பியளிக்கப்படும் என்றும் ICP தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விதிகள் மற்றும் நடைமுறைகள் முன்அறிவிப்பு ஏதும் இல்லாமல் மாற்றத்திற்கு உட்பட்டவை எனவும் அமீரகத்தின் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டியான ICP தெரிவித்திருப்பதும் குறிப்படத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!