அமீரக செய்திகள்

அமீரகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 343 பேர் சாலை விபத்தால் உயிரிழப்பு..!! விபத்து குறித்த புள்ளிவிபரங்களை வெளியிட்ட அமைச்சகம்..!!

அமீரகத்தின் உள்துறை அமைச்சகம் (MOI) கடந்த ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்பட்ட மரணங்கள் குறித்த தகவலை ஆராய்ந்து புள்ளிவிபரங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த தரவுகளின் படி, கடந்த ஆண்டில் அமீரகத்தில் சாலை விபத்தினால் ஏற்படும் மரணங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், பெரிய காயங்கள் மற்றும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கடந்த ஆண்டில் மட்டும் அமீரக சாலைகளில் ஏற்பட்ட விபத்துகளால் சுமார் 343 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது 2021 இல் பதிவான சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 381ஐ விட 10 சதவிகிதம் குறைவாக இருப்பதாகவும் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது நீண்ட கால போக்குவரத்து விபத்துகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க குறைவாகும். ஏனெனில் கடந்த 2008 இல் சாலை விபத்துக்களால் அமீரகத்தில் 1,072 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் 68 சதவீதம் குறைந்திருப்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அதேசமயம், கடுமையான விபத்துகள் மற்றும் காயங்களின் எண்ணிக்கையில் ஒட்டுமொத்த அதிகரிப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், சாலை விபத்துகளால் 5,045 பேர் காயமடைந்துள்ளனர், இது 2021 இல் பதிவான 4,377 காயங்களுடன் ஒப்பிடும்போது 15 சதவீதம் அதிகரிப்பாகும். இதுபோல, பெரிய விபத்துகளும் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

சாலைகளில் வாகனம் ஓட்டும்போது, கவனச் சிதறல், திடீரென பாதையை மாற்றுதல், டெயில் கேட்டிங் (Tailgating), தடை செய்யப்பட்ட பொருளை உட்கொண்டு வாகனம் ஒட்டுதல், அலட்சியம் மற்றும் கவனக்குறைவு ஆகியவை சாலை விபத்துகளுக்கான முதல் ஐந்து காரணங்களாகக் கூறப்படுகிறது. இவை 57 சதவீத காயங்களுக்கும், 65 சதவீத இறப்புகளுக்கும் முக்கியக் காரணிகளாக இருக்கின்றன.

அதிகளவில் விபத்தை ஏற்படுத்திய வாகனங்கள்:

  • இலகுரக வாகனங்கள் (66 %)
  • மோட்டார் சைக்கிள் (16 %)
  • பேருந்துகள் (7 %)
  • கனரக சரக்கு வாகனங்கள் (5 %).

இது குறித்து அமீரக சாலை பாதுகாப்பு துறை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் தாமஸ் எடெல்மேன் அவர்கள் கூறுகையில், MOI வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவது சாலைப் பாதுகாப்பின் வலுவான குறிகாட்டியாகும், இது நிச்சயமாக அமீரகத்திற்கு அற்புதமான செய்தியாகும் என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பெரிய காயங்கள் மற்றும் விபத்துகளின் அதிகரிப்பு ஆபத்தானது என்பதால், சாலை பாதுகாப்பில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, முதல்கட்டமாக 65 சதவீத இறப்புகள் மற்றும் 57 சதவீத காயங்களுக்கு காரணமான ஐந்து முக்கிய மீறல்கள் சமாளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், அனைத்து பொது மற்றும் தனியார் பங்குதாரர்களும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எமிரேட்களில் நடந்த விபத்துகள்:

கடந்த ஆண்டில் நாட்டிலுள்ள ஏழு எமிரேட்களில் பதிவான விபத்துகளின் புள்ளி விபரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.

  1. அபுதாபி – 127 உயிரிழப்புகள், 1756 காயங்கள்
  2. துபாய் – 120 இறப்புகள் மற்றும் 2,161 காயங்கள்
  3. ராஸ் அல் கைமா – 34 உயிரிழப்புகள் மற்றும் 411 காயங்கள்
  4. ஷார்ஜா- 33 இறப்புகள் மற்றும் 320 காயங்கள்
  5. அஜ்மான் – 13 உயிரிழப்புகள் மற்றும் 166 காயங்கள்
  6. உம் அல் குவைன் – 12 பேர் பலி மற்றும் 46 காயங்கள்
  7. ஃபுஜைரா – 4 பேர் உயிரிழப்பு மற்றும் 185 பேர் காயம்.

Related Articles

Back to top button
error: Content is protected !!