அமீரக செய்திகள்

அமீரகம் வர ஸ்பான்சர் தேவையில்லை.. நுழைவு விசா விதிமுறைகளில் மாற்றம்.. பல்வேறு புதிய விசாக்கள் அறிமுகம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் நுழைவு விசா விதிமுறைகளில் மாற்றங்களை மேற்கொண்டு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஒரு புதிய நுழைவு அமைப்பு ஒன்றை அமீரக அரசு அறிவித்துள்ளது. அமீரகத்திற்கு வெவ்வேறு நோக்கங்களுக்காக வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு பல்வேறு வகையான விசா வகைகள் இந்த புதிய நுழைவு அமைப்பின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதன் முறையாக குறிப்பிட்ட விசாவில் அமீரகம் வர ஸ்பான்சர் தேவையில்லை என்பது உட்பட, அனைத்து விசா வகைகளுக்கான நுழைவுத் தேவைகளை எளிதாக்குதல் மற்றும் பார்வையாளர்களின் தேவைகள் மற்றும் வருகையின் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் நெகிழ்வான விசா காலங்களை வழங்குதல் ஆகியவை இந்த முக்கிய மேம்பாடுகளில் அடங்கும்.

கூடுதலாக, அனைத்து நுழைவு விசாக்களும் ஒரு முறை அல்லது பல நுழைவுகளுக்கு கிடைக்கும் என்றும், மேலும் அவை ஒரே மாதிரியான காலத்திற்கு அதாவது 90 நாட்கள் விசா மேலும் 90 நாட்களுக்கு புதுப்பிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுளளது. மேலும் நுழைவு விசாக்கள் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 60 நாட்களுக்கு செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை விசா (Job Visa)

ஐக்கிய அரபு அமீரகத்தில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளை ஆராய இளம் திறமையாளர்கள் மற்றும் திறமையான நிபுணர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் இந்த புதிய “வேலை விசா” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்தின்படி முதல் அல்லது இரண்டாவது அல்லது மூன்றாவது திறன் மட்டத்தில் வகைப்படுத்தப்பட்டவர்களுக்கும், உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களின் புதிய பட்டதாரிகளுக்கும் இந்த விசா வழங்கப்படுகிறது. இதற்கு குறைந்தபட்ச கல்வி நிலையானது இளங்கலை பட்டம் அல்லது அதற்கு சமமானதாக இருக்க வேண்டும்.

பிசினெஸ் விசா

ஐக்கிய அரபு அமீரகத்தில் வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய முதலீட்டாளர்களையும் தொழில்முனைவோரையும் ஊக்குவிக்க இந்த புதிய விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விசாவில் அமீரகம் வர ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா விசா (Tourist Visa)

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் வழக்கமான சுற்றுலா விசாவிற்கு கூடுதலாக, ஐந்தாண்டு பல நுழைவு சுற்றுலா விசாவும் அமீரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை விசாவில் வரும் சுற்றுலா வாசிகளுக்கு ஸ்பான்சர் தேவையில்லை.

ஐந்தாண்டு பல நுழைவு சுற்றுலா விசாவானது, ஒரு நபரை 90 தொடர்ச்சியான நாட்கள் வரை அமீரகத்தில் தங்க அனுமதிக்கிறது, மேலும் இது ஒரு வருடத்தில் 180 நாட்களுக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் நீட்டிக்கப்படலாம். இந்த விசாவிற்கு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன் கடந்த ஆறு மாதங்களில் $4,000 வங்கி இருப்பு அல்லது அதற்கு சமமான வெளிநாட்டு நாணயங்கள் இருப்பதற்கான ஆதாரம் தேவை.

உறவினர்கள் அல்லது நண்பர்களைப் பார்க்க நுழைவதற்கான அனுமதி

ஒரு பார்வையாளர் ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் அல்லது குடியிருப்பாளரின் உறவினர் அல்லது நண்பராக இருந்தால், இந்த நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கும் ஸ்பான்சர் அல்லது ஹோஸ்ட் தேவையில்லை.

தற்காலிக பணி (Temporary Work)

இந்த வகை விசாவானது திட்ட அடிப்படையிலான தற்காலிக பணி ஒதுக்கீட்டைக் கொண்டிருப்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இது முதலாளியால் ஸ்பான்சர் செய்யப்படுகிறது. இதற்கு ஒரு தற்காலிக வேலை ஒப்பந்தம் அல்லது வருகையின் நோக்கத்தை தெளிவுபடுத்தும் முதலாளியிடமிருந்து ஒரு கடிதம் தேவை. மேலும் இந்த வகை விசாவில் அமீரகத்திற்கு வருபவர்களுக்கு வேலை செய்வதற்கான உடல் தகுதிக்கான மெடிக்கல் பிட்னெஸ் சான்று தேவை.

படிப்பு அல்லது பயிற்சி (Studies or Training)

இந்த வகை விசாவானது பயிற்சி மற்றும் படிப்புகள் அல்லது இன்டர்ன்ஷிப் திட்டங்களில் பங்கேற்பவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஸ்பான்சர் வழங்குபவர்கள் அரசு நிறுவனம் அல்லது தனியார் நிறுவனம் அல்லது அமீரகத்தில் உரிமம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களாக இருக்கலாம். மேலும் படிப்பு அல்லது பயிற்சி அல்லது இன்டர்ன்ஷிப் திட்டத்தின் விவரங்களையும் அதன் கால அளவையும் தெளிவுபடுத்தும் கடிதத்தை ஸ்பான்சர் வழங்க வேண்டும்.

மேலும் படிக்க:: 5 வருட அமீரக கிரீன் விசா பெறுவதற்கான தகுதிகளை வெளியிட்ட அமீரக அரசு..!!

Related Articles

Back to top button
error: Content is protected !!