அமீரக செய்திகள்

அமீரகத்தில் கட்டப்பட்டு வரும் இந்து கோவில்..!! – எப்போது திறக்கப்படும்? UAE அமைச்சர் ஷேக் நஹ்யான், BABS மந்திர் தலைவர் இருவரும் சந்திப்பு…

அமீரகத்தில் சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சரான (Minister of Tolerance and Coexistence) ஷேக் நஹ்யான் முபாரக் அல் நஹ்யான் அவர்கள், BAPS இந்து மந்திர் தலைவர் சுவாமி பிரம்மவிஹாரிதாஸ் என்பவரை சந்தித்து, அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்து கோவிலின் முன்னேற்றம் மற்றும் திறப்பு விழா போன்றவை குறித்து கேட்டறிந்துள்ளார்.

இந்த சந்திப்பில், அமீரகத்திற்கான ஓமன் தூதர் டாக்டர் அஹ்மத் பின் ஹிலால் அல்புசைதி மற்றும் அபுதாபியில் பாரம்பரிய இந்து கோவிலை கட்டும் அமைப்பான BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தாவின் உயர்மட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

கோவில் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்ததில் மிகவும் ஈர்க்கப்பட்ட ஷேக் நஹ்யான், மதிப்புகள், நல்லிணக்கம் மற்றும் கலாச்சார செறிவூட்டலை மேம்படுத்துவதில் கோவிலின் ஆழமான தாக்கத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்துடன், பிரமிடுகள் மற்றும் இன்னும் பல உலக அதிசயங்களில் ஒன்றாக இந்த கோவில் இருக்கும் என்று கூறியதுடன், இந்த கோவில் கட்டுமானத்தில் புனிதர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.

கோவில் குறித்து மேலும் விவரிக்கையில், “பல பேர் வாக்குறுதிகளை வழங்குகிறார்கள், ஆனால் ஒரு சிலர் மட்டுமே நிறைவேற்றுகிறார்கள். நீங்கள் வாக்குறுதியளித்ததை விட அதிகமாக வழங்கியுள்ளீர்கள், மேலும் மக்கள் உலகை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை மாற்றுகிறீர்கள்” என்று ஷேக் நஹ்யான் கூறியுள்ளார்.

தற்போது, அபுதாபியில் உள்ள அபு முரைக்காவில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த இந்து கோவில் கட்டப்பட்டு வருகிறது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிலத்தை வழங்கியதற்கு நன்றி தெரிவித்த சுவாமி பிரம்மவிஹாரிதாஸ், எமிரேட்டில் ஒரு கோவிலை நிறுவுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியிருக்கிறார்.

அமீரகத்தில் கட்டப்படும் கோவிலின் முக்கியத்துவம் குறித்து அவர் கூறியதாவது: “BAPS இந்து கோவிலின் கட்டுமானமானது, இந்தியாவிற்கும் அமீரகத்திற்கும் இடையில் மட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு இடையே இணக்கமான உறவுகளை வளர்ப்பதற்கான வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது. இது சர்வதேச நல்லிணக்கத்தின் உணர்வையும் மனிதகுலத்தை ஒன்றிணைக்கும் மதிப்பையும் நமக்கு நினைவூட்டுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமீரகத்திலேயே மிகப்பெரியதாக அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்த கோவிலானது, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
error: Content is protected !!