அமீரக செய்திகள்

எக்ஸ்போ சிட்டி துபாயின் மற்றுமொரு முக்கிய மைல்கல்..!! விரைவில் திறக்கப்படவுள்ள எக்ஸ்போ சிட்டி மால்..!!

துபாயின் மாஸ்டர் டெவலப்பரான எமார்(Emaar), எக்ஸ்போ சிட்டி துபாயில் சுமார் 385,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட எக்ஸ்போ சிட்டி மாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்க உள்ளது. இந்த மால், ஷாப்பிங் செய்ய வருபவர்கள் ஏராளமானவற்றை அனுபவித்து மகிழும் வகையில், 190க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் உணவு மற்றும் பானங்கள் (F&B) கடைகள், குழந்தைகள் விளையாட்டு மைதானங்கள், 45,000 சதுர மீட்டருக்கு பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள், அத்துடன் கல்வி மற்றும் கலாச்சார நிறுவனங்களுக்கான அணுகல் உட்பட பல்வேறு செயல்பாடுகள் மற்றும் வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்க அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் எக்ஸ்போ சிட்டி மால் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், Emaar-ன் மற்ற வணிக வளாகங்களான துபாய் மால் மற்றும் துபாய் ஹில்ஸ் மாலை விட இது சிறியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எமாரின் சவுத் மாஸ்டர்பிளானின் ஒரு பகுதியாக, வரவிருக்கும் இந்த மால் 5,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் பல புதிய குடியிருப்பு திட்டங்கள் இப்பகுதியில் வருகின்ற நிலையில், ஷேக் முகமது பின் சயீத் சாலை, எக்ஸ்போ ரோடு, ஜெபல் அலி ரோடு மற்றும் துபாய் மெட்ரோ வழியாக இந்த புதிய ஷாப்பிங் மாலை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 1,000-க்கும் மேற்பட்ட வாகன பார்க்கிங் இடங்கள் இங்கு அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வரவிருக்கும் புதிய மால் எக்ஸ்போ சிட்டியில் ஒரு முக்கிய ஈர்ப்பு மற்றும் ஷாப்பிங் இடமாக இருக்கும் என்றும், எக்ஸ்போ சிட்டியானது ஒரு பெரிய சுற்றுலா மற்றும் MICE (கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) நடத்துவதற்கு ஏற்ற வகையில் பெருமளவு இடவசதியைக் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இனி வரும் ஆண்டுகளில் மில்லியன் கணக்கான மக்கள் வருகை தரும் இடமாகவும் இந்த எக்ஸ்போ சிட்டி அமையும் என்று கூறப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில், எக்ஸ்போ சிட்டியின் பல அனுபவங்கள் மற்றும் செயல்பாடுகளை பார்வையாளர்கள் இலவசமாக அனுபவிக்கலாம், இதன் மூலம் பார்வையாளர்கள் எந்த நுழைவுச் சீட்டுகளும் இன்றி உலகின் மிகப்பெரிய நிகழ்சிகளை அனுபவிக்கலாம். இருப்பினும், பின்வரும் இடங்களுக்கு டிக்கெட் வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

1. அலிஃப் – தி மொபிலிட்டி பெவிலியன் மற்றும் டெர்ரா – தி சஸ்டைனபிலிட்டி பெவிலியன்; ஒரு பெவிலியனுக்கு ஒரு நபருக்கு 50 திர்ஹம் கட்டணமாக வசூலிக்கப்படும்.

2. கார்டன் இன் தி ஸ்கை – இங்கு ஒரு சவாரிக்கு 30 திர்ஹம்கள் செலவாகும்.

கடந்த 2021 ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘Dubai Expo 2020’ ஆறு மாத காலம் நடைபெற்று மார்ச் 31, 2022 அன்று நிறைவடைந்தது, மேலும் இது உலகெங்கிலும் இருந்து 24.1 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களின் வருகைகளைப் பதிவு செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!