இந்திய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா பயணிப்பவர்களுக்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் இன்று முதல் அமல்…!!

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் இந்தியா வந்தவுடன் ஒரு வாரத்திற்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வெள்ளிக்கிழமை ஜனவரி 7 ம் தேதி வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதலில் தெரிவித்திருந்தது. இதனையொட்டி, இன்று (11.1.2022) முதல் இந்தியாவில் இந்த நடைமுறையானது அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

தற்பொழுது நடைமுறைக்கு வந்துள்ள நெறிமுறைகளின்படி அனைத்து நாடுகளிலிருந்தும் வரும் பயணிகள் ஏழு நாட்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள், மேலும் இந்தியா வந்த 8வது நாளில் RT-PCR சோதனை எடுக்க வேண்டும். பின்னர் அந்த RT-PCR சோதனையின் முடிவுகளை பயணிகள் ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தால், அடுத்த ஏழு நாட்களுக்கு அவர்கள் தங்கள் உடல்நிலையை மேலும் சுயமாக கண்காணிப்பார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அத்தகைய பயணிகள் நேர்மறை முடிவை பெற்றால், அவர்களின் மாதிரிகள் INSACOG ஆய்வக நெட்வொர்க்கில் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட வேண்டும்.

மேலும் கொரோனா பாதிக்கும் அபாயம் அதிகம் உள்ள நாடுகள் (high risk countries) என இந்திய அரசால் பட்டியலிடப்பட்டுள்ள குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள், கோவிட்-19 பரிசோதனைக்கான மாதிரிகளை வந்து சேரும் விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி, சோதனை முடிவுகள் வந்த பிறகே அவர்கள் விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய சோதனைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும், அவர்களுக்கு கோவிட்-19 நோய்க்கான அறிகுறிகள் அவர்கள் விமான நிலையம் வந்திறங்கிய போது அல்லது வீட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் போது கண்டறியப்பட்டால், அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வகுக்கப்பட்ட நெறிமுறையின்படி சிகிச்சை செய்யப்படுவார்கள் எனவும் திருத்தப்பட்ட வழிகாட்டுதலில் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பே தமிழக அரசு ஒரு சில நாட்களுக்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தல் நடைமுறையை அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!