அமீரக செய்திகள்

சத்தமும் வராது.. சுற்றுச்சூழல் மாசும் அடையாது.. நீரின் மேல் 80 செமீ உயரத்தில் பறக்கும் உலகின் முதல் பறக்கும் படகு துபாயில் அறிமுகம்…!!

ஒவ்வொரு நாளும் நம் கற்பனைக்கெட்டாத புதுப்புது தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஐக்கிய அரபு அமீரகம் என்றென்றும் தனித்து விளங்குகிறது. உலகின் மற்ற நாடுகளெல்லாம் வியந்து பார்க்கும் அளவிற்கு குறைந்த காலத்தில் பொருளாதாரத்தில் பிரம்மாண்ட உச்சியை அடைந்துள்ளது அமீரகம். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் அமீரகத்தில் பல்வேறு நாட்டினரின் திறமையையும் வெளிப்படுத்தவும் திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

அதன் வரிசையில் வாகனம் தரையில் இயக்க, கப்பல் நீரில் மிதக்க, விமானம் வானில் பறக்க என்ற விதிகளை மாற்றி நிலத்தில் ஓடும் காரையும் பறக்க செய்வோம், நீரில் மிதக்கும் படகையும் பறக்க செய்வோம் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்தவும் உள்ளது அமீரகம்.

சில தினங்களுக்கு முன்பாக பறக்கும் ஹைப்பர்காரின் சோதனை ஓட்டத்தை செயல்படுத்தி வரும் அமீரகம் தற்பொழுது பறக்கும் படகினை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தை தளமாகக் கொண்ட நிறுவனமான THE JET ZeroEmission, ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட ஜெனித் மரைன் சர்வீசஸ் LLC மற்றும் DWYN LLC யுடன் இணைந்து ‘தி ஜெட்’ எனும் முதல் சுத்தமான ஆற்றல் கொண்ட, ஹைட்ரஜனால் இயங்கும் பறக்கும் படகினை தயாரிக்கவுள்ளன. அழகிய வடிவமைப்பைக் கொண்ட இந்தப் படகின் உலக அரங்கேற்றம் துபாயில் நடைபெறவுள்ளது.

எதிர்காலத் தொழில்களுக்கான உலகளாவிய மையமாக துபாயின் முன்னணி நிலையை இந்த அறிவிப்பு பிரதிபலிக்கிறது. துபாயின் வலுவான உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவான முதலீட்டுச் சூழல் புதுமையான நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய படைப்புகளை அடைவதற்கான சிறந்த தளமாக மாற்றியுள்ளது.

பறக்கும் படகான ‘தி ஜெட்’ அதிநவீன சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. இது 40 knots (75 km) வேகத்தில் கடல் மீது எவ்வித இரைச்சலின்றி அமைதியாக பறக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஆடம்பரமான படகில் 8 முதல் 12 பயணிகள் பயணிக்க முடியும். இந்த படகானது இரண்டு எரிபொருள் செல்கள், ஏர் கண்டிஷனர், கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவும்தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த, THE JET ZeroEmission இன் நிறுவனர் அலைன் தெபால்ட் கூறுகையில் “துபாயில் இருந்து இந்த அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சத்தம், அலைகள் அல்லது உமிழ்வுகள் இல்லாமல் பயணம் செய்யும் மற்றும் நீரிலிருந்து 80 சென்டிமீட்டர் உயரத்தில் பறக்கும் திறன் கொண்ட உலகின் முதல் படகாக இருக்கும் ‘தி ஜெட்’ டை நாங்கள்தயாரிக்கிறோம்”.

“உலகெங்கிலும் உள்ள கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் புதுமையான திட்டங்களை உருவாக்கி, அவர்கள் விரும்பிய வெற்றியை அடைய துபாய் ஒரு சிறந்த இடமாகும், அதனால்தான் நாங்கள் அமீரகத்தில் ‘THE JET’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளோம். நாங்கள் 2023 ம் வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் 28 வது சர்வதேச காலநிலை உச்சி மாநாட்டில் (COP28 UAE) இந்த அற்புதமான பறக்கும் படகுடன் அனைவரையும் சந்திப்பதை எதிர்நோக்கியுள்ளோம்,” என்று தெபால்ட் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!