வளைகுடா செய்திகள்

சுற்றுலாப் பயணிகளை குதூகலப்படுத்த சலாலாவில் பிரம்மாண்டமாக திறக்கப்படும் “வாட்டர் தீம் பார்க்”… கட்டுமான பணிகள் தீவிரம்!

2023 ஆம் ஆண்டின் கரீஃப் சீசனிற்காக (Khareef Season) வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஓமான் அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சலாலாவில் ‘அல்-நசீம் வாட்டர் பார்க்’ என்ற பொழுதுபோக்கு திட்டத்தினை அமைப்பதற்கான செயல்பாட்டுப் பணிகள் தொடங்கியுள்ளது. நாட்டின் பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா துறையினை மேம்படுத்தும் நோக்கில் இந்த வாட்டர் பார்க்கானது தொடங்கப்பட்டுள்ளது.

தோஃபர் நகராட்சியின் தலைவர் டாக்டர் அஹ்மத் மொஹ்சென் அல் கசானி, தோஃபரின் ஆளுநரான மாண்புமிகு சையத் மற்றும் பல அதிகாரிகள் இணைந்து வாட்டர் பார்க் அமைப்பதற்கான மேற்கொள்ளப்பட்ட பணிகளை சமீபத்தில் மேற்பார்வையிட்டனர். மேலும் இது குறித்து அவர்கள் கூறும் பொழுது ஓமான் நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் இந்த பூங்கா திறக்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலமாக ஓமான் நாட்டின் வருவாயை மேம்படுத்த முடியும் என்றும் ஓமானியர்களுக்கு பல வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

சலாலாவில் உள்ள சஹேல் அத் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்கா 40,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் மூன்று கட்டங்களைக் கொண்டுள்ளது, முதலாவது அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வாட்டர் தீம் பார்க் உருவாக்குவதாகும், இரண்டாவது கட்டம் மினியேச்சர் மிருகக்காட்சிசாலையை நிறுவுதல் ஆகும்.

அதே நேரத்தில் மூன்றாவது கட்டத்தில் வெவ்வேறு வயதினருக்கு ஏற்ப பொழுதுபோக்கு விளையாட்டுகளுக்கான பூங்கா நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காக்களை நிர்வகிக்கும் பொறுப்பானது அல் நசீம் குழும நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவானது திறக்கப்படும் நிலையில் ஓமான் நாட்டின் சுற்றுலா வளர்ச்சிக்கு இது பெருமளவு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சுற்றுலாவிற்காக வருகை தரும் பயணிகளுக்கு குதூகலம் அளிக்கும் பொழுதுபோக்கு அம்சமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!